மருத்துவமனை விட்டு வெளியேற முதலில் நடனமாடு!!!- கமலா புஜாரியை வற்புறுத்திய சமூக ஆர்வலர்!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா புஜாரியை, ஐசியூ-வில் நடனமாட கூறி வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. அதன் வீடியோ வைரலானதை அடுத்து, இது தற்போது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மருத்துவமனை விட்டு வெளியேற முதலில் நடனமாடு!!!- கமலா புஜாரியை வற்புறுத்திய சமூக ஆர்வலர்!!!

விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளை ஊக்குவிக்கவும், ஆர்கானிக் விவசாயத்தை பின்பற்றிய கமலா புஜாரி, ஒடிஷாவைச் சேர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டு, ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், நெல், கோதுமை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட உள்நாட்டு விதைகளை பதப்படுத்தி பாதுகாத்து வந்திருக்கிறார். இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க இவரது பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

சமீபத்தில், உடல்நலக் குறைவால் SCB மருத்துவ கல்லூரி மற்றும் கட்டாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிறுநீரகப் பிரச்சனையால் ஐ.சி.யு-வில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரை கவனித்துக் கொண்ட சமூக ஆர்வலர் மமதா பெஹரா என்பவர், கமலாவை படுக்கையில் இருந்து எழுப்பி, ஒடிஷாவின் பாரம்பரிய ஆடலான, தேம்சா நடனம் ஆடவைத்திருக்கிறார். ஆனால், கமலாவால் நிற்கக் கூட முடியவில்லை என்றாலும், நடனத்தை மமதா நடனமாட வைத்திருக்கிறார். அதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்ட நிலையில், வைரலானது; மேலும் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உடல்நலம் முடியாத 70 வயதுக்கும் மேலான ஒரு மூதாட்டியை ஆட சொல்லி அதுவும் ஐசியூ-வில் இப்படி செய்தது கொடுமையின் உச்சம் என, அவரது பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த வீடியோவில் வரும் காட்சிகளால், மன வேதனை அடைந்திருப்பதாகவும், தங்களது இனத்தவரை பொதுவெளியில் ஆடச் சொல்லி அவமானப்படுத்துவதாகவும், சமுக ஆர்வலர் மமதாவிற்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், மமதா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், இது இனவகை போராட்டமாக மாறும் என ஒடிஷாவின் பரஜ பழங்குடியின மக்கள் கூறியதை அடுத்து, இது பெரும் சர்ச்சையானது.

இது குறித்து மமதா பேசிய போது, கமலாவை உற்சாகப்படுத்த தான் அவரை ஆட வைத்ததாகக் கூறினார். மேலும் பேசிய அவர், “தனது கோரபுத் கிராமத்திற்கு உயிரோடு திரும்புவேனோ மாட்டேனோ என அஞ்சிய கமலாவை உற்சாகப்படுத்த பல விதமாக முயற்சி செய்தேன். ஆனால், அவர் மனநிலை உடைந்தே இருந்தது. அவரே என்னிடம் தேம்சா நடனம் ஆட விரும்பியதாகக் கேட்டார். அதனால் தான் அவரது உடல்நிலை கருதி நானே அவரைப் பிடித்துக் கொண்டு அவருடன் ஆடினேன்” எனக் கூறினார்.

ஆனால், கமலா புஜாரியே தன் பக்கக் கதையை வேறு மாதிரி கூறியதால் தான் இந்த சர்ச்சை பெரிதாக உருவெடுத்துள்ளது. என்னவென்றால், அப்பகுதியின் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய போது, ”தனக்கு ஆட பிடிக்கவில்லை என்று கூறிய பிறகும் மமதா என்னை கட்டாயப்படுத்தி ஆட வைத்தார்.” எனக் கூறியுள்ளார். இதனால், மமதாவிற்கு எதிராக பல கருத்துகள் வெளியாகியுள்ளது.