இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதாரத்தை மேம்படுத்த ஒப்பந்தம்! இருநாட்டையும் பயனடைய செய்யும் வகையில் இருக்கும் - பிரதமர் மோடி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்...

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பொருளாதாரத்தை மேம்படுத்த ஒப்பந்தம்! இருநாட்டையும் பயனடைய செய்யும் வகையில் இருக்கும் - பிரதமர் மோடி!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தகத்தை மேம்படுத்த இடைக்கால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ஆஸ்திரேலிய வர்த்தகத்துறை அமைச்சர் டான் டெஹான் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்திய பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் பேசிய பிரதமர் மோடி, இந்திய-ஆஸ்திரேலியா இடையிலான ஒப்பந்தம் மிக முக்கியமாக பார்க்கப்படுவதாகவும், இந்த ஒப்பந்தம் இருநாட்டையும் பெரிதாக பயனடைய செய்யும் என்றும் கூறினார். 

இதையடுத்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், இந்த ஒப்பந்தம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான பொருளாதார உறவில் ஒரு மைல்கல் என்றும், இதன்மூலம் ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் இந்திய மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கப்பெறும் என்றும் தெரிவித்தார்.  

தொடர்ந்து பேசிய மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று கூறியுள்ளார். மேலும், இந்தியா-ஆஸ்திரேலியா கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்ததாக குறிப்பிட்டுள்ளார்..