”என் மீது மை வீசினால் சகதியை வீசுவேன்”-மம்தா

”என் மீது மை வீசினால் சகதியை வீசுவேன்”-மம்தா
Published on
Updated on
2 min read

ஊழல் புகார்:

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்வதற்காக 2016ல் மேற்கு வங்காளத்தில்  நடைபெற்ற   தேர்வில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.  அப்போது மேற்கு வங்காளத்தின் கல்வித் துறை அமைச்சராக பார்த்தா சாட்டர்ஜி  இருந்தார். தற்போது இது தொடர்பான விசாரணைக்கு சி.பி.ஐ. க்கு உத்தரவிடப்பட்டது. இதில் 100 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், அமலாக்கத் துறையும் விசாரணை நடத்தி வந்தது.

ஊழல் புகாரைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் தொடர்ந்து 11 மணிநேரம் சோதனை நடத்தினர். அதே நாளில் பார்த்தாவுடன் 11 பேரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.  இதில் பார்த்தாவின் உதவியாளரான அர்பிதா பானர்ஜி வீட்டில்  21.90 கோடி ரூபாய் பணம், நகை, செல்போன்கள் மற்றும் ஆவணங்களை அமலாக்கத் துறையினர் கைப்பற்றினர்.  இதனையடுத்து, சட்ட விரோதமான பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது உதவியாளர் அர்பிதா முகர்ஜியை, கடந்த 23 ஆம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.

மருத்துவமனையில் அனுமதி:

கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து அவர் மாநில அரசின் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஒடிசாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் பார்த்தா சாட்டர்ஜி நலமுடம் இருப்பதாக கூறினர். இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

அமைச்சரிடம் விசாரணை:

சிகிச்சை முடிந்து கொல்கத்தா அழைத்து வரப்பட்ட அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியிடம் அமலாக்கத் துறையினர் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர். பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அர்பிதா முகர்ஜியை வரும் 3 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கைது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர்:

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்கள் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன.  மகாராஷ்டிரா போன்று பல்வேறு மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேற்கு வங்காளத்திடம் வந்துள்ளனர்.  எங்களை தாக்க அவர்கள் வங்காள விரிகுடாவை கடக்க வேண்டும்.  சுந்தரவனக்காடுகளைத் தாண்ட வேண்டும்.  அப்போது அவர்களை வங்கப்புலிகள் பதுங்கி தாக்கும்.முதலைகள் கடிக்கும். வடக்கு வங்காளத்தில் யானைகள் மிதிக்கும். 

மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் திரிணாமூல் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என எண்ணுகிறார்கள்.  கட்சியை உடைத்து விடலாம் என பாஜக நினைத்தால் அது அது எண்ணமாக மட்டுமே இருக்கும். விரைவில் உண்மை வெளி வரும். எனது கட்சி உறுப்பினர்களுள் திருடனோ, கொள்ளைக்காரனோ இல்லை. அவ்வாறு யாரேனும் இருந்தால் அவர்களை கட்சியில் வைத்திருப்பதில்லை. என் மீது மை வீச முயற்சித்தால் நான்அவர்கள் மீது சகதியை வீசுவேன் என்று மம்தா பதிலளித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com