மணிப்பூர் சென்று திரும்பிய I.N.D.I.A எதிர்கட்சி எம்.பிக்கள் சொன்னது என்ன?

மணிப்பூர் சென்று திரும்பிய I.N.D.I.A எதிர்கட்சி எம்.பிக்கள் சொன்னது என்ன?

மணிப்பூருக்கு இருநாள் பயணமாக சென்று திரும்பிய இந்தியா எதிர்கட்சியினர், குறிப்பிடத்தகுந்த வகையில் மத்திய - மாநில அரசுகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.


மணிப்பூரில் குகி பழங்குடியினர் மெய்த்தி இனத்தவர்களிடையே வெடித்த கலவரத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். குக்கி பழங்குடியினப் பெண்கள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் சூழலை ஆராய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் கனிமொழி, தொல்.திருமாவளவன் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் இருநாள் பயணமாக மணிப்பூர் சென்றனர்.

இரு குழுக்களாகப் பிரிந்து சென்ற எம்.பிக்கள் இம்பால், சுராசத்பூர் உள்ளிட்ட பகுதிகளில்  முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, கலவர பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தனர். 

தொடர்ந்து, இரண்டு நாள் ஆய்வை நிறைவு செய்த இந்தியா கூட்டணி எம்மபிக்கள் குழுவினர், அம்மாநில ஆளுநர் அனுசுயாவை சந்தித்து மாநிலத்தில் அமைதியை மீட்டெடுக்குமாறு கூட்டறிக்கை அளித்தனர். பாதிக்கப்பட்ட மக்களின் நிலை எப்படி இருக்கிறது என்பது பற்றியும் அறிக்கையில் விவரித்துள்ளனர்.

இதையும் படிக்க : ''மோடியின் நகத்தில் உள்ள அழுக்கின் பக்கம் கூட திமுக வர முடியாது'' - அண்ணாமலை

இதையடுத்து  டெல்லி திரும்பிய இந்தியா கூட்டணி எம்பிக்கள்  குழு , மணிப்பூரில் குழந்தைகள், மாணவர்கள் என அனைவரும் உணவு இன்றி தவித்து வருவதாக குற்றம்சாட்டினர். டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன், குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும் பெண்கள் உள்ளிட்டோர், உணவு கிடைக்காமலும் அவதியுற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

மணிப்பூரில் தற்போதும் கொந்தளிப்பான சூழ்நிலையே நிலவி வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை எனவும் திமுக எம்.பி கனிமொழி வேதனை தெரிவித்தார்.

மணிப்பூர் தொடர்பாக பிரதமர் அறிக்கை அளிக்காத வரை, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமளி தொடரும் என திமுக எம்.பி திருச்சி சிவா கண்டிப்புடன் கூறினார்.