இமாச்சல், குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி? கருத்து கணிப்பு சொல்வது என்ன?

இமாச்சல், குஜராத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி? கருத்து கணிப்பு சொல்வது என்ன?

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இன்றைய வாக்குப்பதிவில் 58 புள்ளி 8 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது.

முடிவடைந்தது இரண்டாம் கட்ட தேர்தல்:

182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த ஒன்றாம் தேதி 89 தொகுதிகளுக்கு 25 ஆயிரத்து 430 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 19 மாவட்டங்களில் நடைபெற்ற இந்த தேர்தலில் 63 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது. காந்திநகர், வதோதரா, அகமதாபாத் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதற்காக, 14 ஆயிரத்து 975 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இன்றைய வாக்குப்பதிவில் 833 பேர் களத்தில் இருந்தனர். வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இதையும் படிக்க: நெய், திரி. தீப கொப்பரை எல்லாம் தயார்...எதிர்நோக்கி காத்திருக்கும் பக்தர்கள்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். அகமதாபாத்தின் நாரன்புரா பகுதியில் உள்ள நகராட்சி மையத்தில் அமைக்கப்பட்டிருந்த சாவடியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அவரது மகன் ஜெய்ஷா மற்றும் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இதேபோல, குஜராத் முன்னாள் முதல்வரும் தற்போதைய உத்தரபிரதேச ஆளுநருமான ஆனந்தி பென் படேல் ஷைலாஜ் அனுபம் பள்ளியில் வாக்களித்தார்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மாலை 5 மணியோடு நிறைவடைந்தது. இன்றைய வாக்குப்பதிவில்  58 புள்ளி 8 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வாக்குகள் பதிவான பெட்டிகள் மூடி சீல் வைக்கப்பட்டு  வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இதேபோல, 68 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த 12 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது.  இந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த இரு மாநிலங்களிலும் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையே, இரண்டு மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதன்படி,

TV9 கருத்துக்கணிப்பு:

குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) 125-130 இடங்களிலும், காங்கிரஸ் 30-40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று TV9க்கான கருத்துக்கணிப்பு திங்களன்று கணித்துள்ளது. அதேசமயம், ஆம் ஆத்மி கட்சி 3-5 இடங்களிலும் மற்றவை 3-7 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலில் பா.ஜ.க வெற்றி பெறும் : BARC கணிப்பு

BARC நடத்திய கருத்துக்கணிப்பு இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. அதன்படி, பாஜக: 35-40 இடங்களிலும், காங்கிரஸ் (INC): 20-25 இடங்களிலும், ஆம் ஆத்மி (AAP): 0-3, மற்றவை: 1-5 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.