திராவிட மாடல் குறித்து பேசிய தமிழிசை...பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

திராவிட மாடல் குறித்து பேசிய தமிழிசை...பதிலடி கொடுத்த முதலமைச்சர்!

புதுச்சேரி அரசை ஆளுநர் தமிழிசை ஆட்டிப்படைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.

திருமண விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலின்:

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமாரின் இல்லத் திருமண விழா இன்று புதுச்சேரியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்தார். இதை தொடர்ந்து விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், திமுக அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமாரின் பணிகளை பட்டியலிட்டு பாராட்டினார்.  

பொறாமை இருக்கக்கூடாது:

மேலும் புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடித் தொடர்பு உள்ளதாக கூறிய அவர், புதுச்சேரியையும் தமிழ்நாட்டையும் பிரித்துப் பார்க்க முடியாது என்றும், கட்சிக்குள் போட்டி இருக்கலாம் ஆனால்  பொறாமை இருக்கக்கூடாது என்றும் முதலமைச்சர் கூறினார்.

ஆளுநரை விமர்சித்த முதலமைச்சர்:

தொடர்ந்து, ஆளுநர் ஆட்டிப்படைக்கும் ஆட்சிதான் புதுச்சேரியில் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய அவர், மதவாத ஆட்சியும் தற்போது அரங்கேறி வருவதாகவும், இதற்கு முதலமைச்சர் ரங்கசாமியும் ஆளுநருக்கு அடிபணிந்து கிடப்பதாகவும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசையை முதலமைச்சர் கடுமையாக விமரச்சித்தார். அத்துடன் புதுச்சேரியில் திமுக ஆட்சி அமைக்கும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

திராவிட மாடலை விமர்சித்த தமிழிசை:

முன்னதாக, நெல்லையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், திராவிட மாடல் என்ற பெயரை விமர்சித்திருந்தார். ”தமிழகத்தில் மாண்டஸ் புயல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாகவும், மற்ற மாநில ஆட்சி  குறித்தும் கருத்து தெரிவிதெரிவிப்பது சரியாக இருக்காது. ஆனாலும் உயிரிழப்பு இல்லாமல் காத்திருப்பது அவசியம். அதை எடுத்துரைக்க திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும். மாடல் என்பது தமிழா? அவர்கள் என்ன சொன்னாலும் அது தமிழ் வார்த்தை ஆகிவிடுமா? திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்" என விமர்சித்திருந்தார். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே, புதுச்சேரியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் புதுச்சேரி அரசை ஆளுநர் தமிழிசை ஆட்டிப்படைப்பதாக  தெரிவித்தார்.