ககன்யான்: முதல் கட்ட சோதனை வெற்றி!

ககன்யான் விண்கலத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டம் மூன்று முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று காலை  வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு கடலில் தரையிறக்கப்பட்டது.

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முதல் கட்ட பரிசோதனையை இன்று நடத்தியது. அதன்படி டிவி -டி1 ராக்கெட் மூலம் ஆளில்லா விண்கலத்தை செலுத்தும் சோதனை ஓட்டத்தை ஸ்ரீ ஹரிகோட்டவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஏவ இஸ்ரோ திட்டமிட்டு இருந்தது. ஆனால் வானிலை  மற்றும் தொழில்நுட்ப  கோளாறு காரணமாக 3 முறை ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக  காலை 10 மணிக்கு  வெற்றிகரமாக ககன்யான் சோதனை விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

பூமியிலிருந்து புறப்பட்ட ராக்கெட் 8 நிமிடங்களில் திட்டமிட்டபடி  17 கிலோமீட்டர்  இலக்கை சென்றடைந்தது. அதன் பிறகு அதில் பொருத்தப்பட்டிருந்த விண்வெளி வீரர்கள் அமர கூடிய கலன் பகுதி  3 ஆக பிரிந்து, பாராசூட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வங்க கடலில் பாதுகாப்பாக  தரையிறக்கப்பட்டது.

ககன்யான் சோதனை விண்கலம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர்  மகிழ்ச்சி தெரிவித்து கொண்டனர்.  முதல்கட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ தலைவர்  சோம்நாத் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.