உச்சத்தை எட்டிய ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வசூல்.. ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்வு!!

கடந்த ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவான 1 புள்ளி 68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உச்சத்தை எட்டிய ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி வசூல்.. ரூ.1.68 லட்சம் கோடியாக உயர்வு!!

இதுகுறித்து, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது முதல் மாதந்தோறும் இந்தியாவின் வரி வசூல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தின் வரிவசூல் இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதன் படி, ஏப்ரல் மாதத்தின் ஜி.எஸ்.டி வரி வசூல் 1 லட்சத்து 67 ஆயிரத்து 540 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத ஜி.எஸ்.டி வசூல் 1.42 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இது 20 சதவிகிதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில்,  சி. ஜி.எஸ்.டி எனப்படும் மத்திய ஜி.எஸ்.டி வரியாக 33 ஆயிரத்து 159 கோடி ரூபாயும், எஸ். ஜி.எஸ்.டி எனப்படும் மாநில ஜி.எஸ்.டி வரியாக  41 ஆயிரத்து 793 கோடி ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருட்கள் இறக்குமதிக்கான வரியாக வசூலிக்கப்பட்ட 36 ஆயிரத்து 705 கோடி உள்பட ஜி.எஸ்.டி. வசூல் 81 ஆயிரத்து 939 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செஸ் வரி மூலம் 10 ஆயிரத்து 649 கோடி கிடைத்துள்ளது. இது கடந்த மார்ச் மாதத்தில் வசூலான ஜி.எஸ்.டி தொகையை விட ஏப்ரல் மாதத்தில் 25,000 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.