ஜி - 20 மாநாடு; டெல்லியில் உச்சக் கட்ட பாதுகாப்பு!

ஜி - 20 மாநாடு; டெல்லியில் உச்சக் கட்ட பாதுகாப்பு!

சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த, 20 நாடுகள் அங்கம் வகிக்கும், 'ஜி - 20' அமைப்பின் உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுதினம் டில்லியில் நடைபெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் வருகையால் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக நாடு முழுவதும், 28 மாநிலங்கள், எட்டு யூனியன் பிரதேசங்களில் 'ஜி - 20 ' நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்ற துறை ரீதியிலான கூட்டங்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. இதன் இறுதிக்கட்டமாக பிரதான மாநாடு நாளையும், நாளை மறுநாளும் டெல்லியில் நடக்கவுள்ளது. 

இதையொட்டிய கொண்டாட்டத்துக்கு தயாராகி வரும் டெல்லி நகரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முதலே போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால், பள்ளி கல்லூரிகள் மற்றும் பெரும்பாலான அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்தியா கேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன், சீனா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் பங்கேற்கும் மாநாடு இந்தியாவில் முதல் முறையாக நடக்கிறது என்பதால், உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன 'ஸ்னைப்பர்' துப்பாக்கி ஏந்திய வீரர்கள் உட்பட ஆயிரக்கணக்கான போலீசார் டெல்லி முழுவதும் ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,  சீன பிரதமர் லீ கியாங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,  ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ், இம்பீரியல் உள்ளிட்ட பல தலைவர்கள் வருகையால் டெல்லி மாநகரம் விழாகோலம் பூண்டுள்ளது. 

இதையும் படிக்க:"சென்னையிலிருந்து 2 மணி நேரத்தில் பெங்களூரு" மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு!