உத்திரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி சுட்டுக்கொலை...!!

உத்திரப் பிரதேசத்தில் முன்னாள் எம்.பி சுட்டுக்கொலை...!!

உத்திரப் பிரதேசத்தைச் சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பி ஆதிக் அகமது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை செய்யப்பட்ட வழக்கில் என்கவுண்டர் செய்யப்பட்ட ஆசாத் அகமதின் தந்தையும், சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.பியுமான ஆதிக் அகமது, பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அகமதாபாத் சிறையில் அடைக்கப் பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 11-ம் தேதி அவரது மகனின் இறுதி சடங்கிற்காக அவர் உத்தரபிரதேசம் அழைத்து வரப்பட்டார். அவரை பலத்த பாதுகாப்புடன் காவல்துறையினர் வைத்திருந்தனர். 

இந்த நிலையில், நேற்று இரவு பிராயாக்ராஜ் பகுதியில் மருத்துவ பரிசோதனைக்காக அவரையும், அவரது சகோதரரான அஷ்ரப் அகமதையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர், காவலர்கள் கண் முன்பே ஆதிக், அஷ்ரப் இருவரையும் சரமாரியாக சுட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை மூன்று பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் அனைத்து மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும், நேற்று இரவு காவலர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய கொடி ஊர்வலம் மேற்கொண்டனர்.