கிரிப்டோகரன்சிக்கு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்...

கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய பயன்பாட்டுக்கு, இந்தியாவில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிரிப்டோகரன்சிக்கு கடும் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மத்திய அரசு திட்டம்...

அமெரிக்கா உள்பட பல வளர்ந்த நாடுகள் கூட, கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க தயக்கம் காட்டுகின்றன. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில்,  கிரிப்டோகரன்சியை பயன்படுத்த அனுமதிப்பது தொடர்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நிதித் துறை உயரதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டார்.  அப்போது, பயங்கரவாதம் மற்றும் பணமோசடிக்கு உதவும் என்பதால் இதை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நிதித் துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு கூட்டம், அதன் தலைவரான முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா தலைமையில் நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று, தங்கள் வாதத்தை முன்வைத்தனர். கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்காமல் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்காமல், கட்டுப்பாடுகள் மட்டும் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.