விவசாயிகள் போராட்டத்தில் திடீரென வன்முறை- விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழப்பு…  

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டதற்கு ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். வன்முறைக்கு காரணமாக மத்திய அமைச்சரின் மகனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தில் திடீரென வன்முறை- விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழப்பு…   

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில், தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்க, அம்மாநில துணை முதலமைச்சர் சென்றுள்ளார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், துணை முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே, விவசாயிகளின் கூட்டத்தில் புகுந்து கார் மோதியதில், இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது. துணை முதலமைச்சரின் கார் உட்பட 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். கலவரம் மற்றும் வன்முறை காரணமாக விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் சென்ற கார்தான், விவசாயிகள் கூட்டத்தில் புகுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ இடத்தில் தமது மகன் இல்லை என, மிஷ்ரா விளக்கம் அளித்துள்ளார். அவ்வாறு இருந்திருந்தால் உயிருடன் திரும்பியிருக்க மாட்டான் என்றும், சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தமது மகன் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரம் உள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். லக்கிம்பூர் வன்முறை சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ள உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இதனிடையே, உத்தரப்பிரதேச வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, லக்கிம்பூரில் நடந்திருப்பது மனித தன்மையற்ற படுகொலை என கூறியுள்ளார். விவசாயிகளின் தியாகத்தை வீணாக விட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். லக்கிம்பூரில் நிகழ்ந்த காட்டுமிராண்டித்தனமான சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது என்றும், விவசாயிகள் மீதான பா.ஜ.க. அரசின் அக்கறையின்மை மிகவும் வேதனைப்படுத்துவதாகவும், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். விவசாயிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவசாயிகளை கொல்வதற்கு இந்த அரசாங்கம் அரசியலை பயன்படுத்துகிறது என்பதை லக்கிம்பூர் சம்பவம் காட்டுவதாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இது விவசாயிகளின் நாடு என்றும், பா.ஜ.க.வினரின் நாடு அல்ல எனவும் அவர் கடுமையாக சாடியுள்ளார். வன்முறை நிகழ்ந்த லக்கிம்பூர் பகுதிக்கு, பிரியங்கா காந்தி இன்று செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.