டோக்கியோவில் நிலநடுக்கம்... சுனாமி பீதியில் மக்கள்...

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

டோக்கியோவில் நிலநடுக்கம்... சுனாமி பீதியில் மக்கள்...

ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 ஆக பதிவான நிலநடுக்கம் காரணமாக அந்நகரின் பெரும்பாலான பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் அதிர்ந்தன. மேலும் கடைகளின் அலமாரிகளில் இருந்து பொருட்கள் விழுந்த காட்சிகளும் வெளியாகியுள்ளது.

டோக்கியோவில் கிழக்கு பகுதியில் உள்ள சிபா  என்ற இடத்தில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகத் அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோவின் பல்வேறு பகுதிகளில் புல்லட் ரயில்கள் மற்றும் உள்ளூர் ரயில்கள் அப்படியே நிறுத்தப்பட்டன. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதேபோல் மியான்மர் நாட்டிலும் மிதமான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. மோனிவா பகுதியில் நேற்று இரவு 11.58 மணியளவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 5 ஆக பதிவானதாக, தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. பர்மாவின் மேற்கு வட மேற்கு பகுதியில் 144 கிலோ மீட்டர் தொலைவில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.