"வாஷிங்டன் செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?" கார்கே சரமாரி கேள்வி!

"வாஷிங்டன் செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா?" கார்கே சரமாரி கேள்வி!

மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க குடியரசுத்தலைவர் உத்தரவிட வேண்டுமென அவரை சந்தித்து மனு அளித்தபின் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேட்டியளித்துள்ளார். 

கடந்த மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் இந்தியா எதிர்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பிக்கள் மணிப்பூர் சென்று மக்களை சந்தித்ததோடு, ஆளுநர் அனுசுயாவையும் சந்தித்து ஆய்வறிக்கையை சமர்பித்தனர். இந்நிலையில் மணிப்பூர் சென்று வந்த 21 எம்.பிக்களும் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை டெல்லியில் சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர்.

காங்கிரசின் மல்லிகார்ஜூன கார்கே, திமுகவின் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் கனிமொழி, மதிமுகவின் வைகோ, விசிகவின் திருமாவளவன், என்.சி. பி-யின் சரத்பவார் உள்ளிட்ட 31 எதிர்கட்சி எம்பிக்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : பேனா நினைவுச் சின்னத்தின் முதற்கட்ட பணிகள் தொடக்கம் - எ.வ.வேலு!

அப்போது பேசிய கார்கே, நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லாத நிலை உருவாகி உள்ளதாகவும், மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு குடியரசுத் தலைவர் உத்தரவிட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் 267 விதியின் கீழ் மணிப்பூர் தொடர்பாக விவாதம் நடத்த தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது ஏன் என கேள்வியெழுப்பிய அவர், எத்தனை முறைதான் ஒத்திவைப்புத் தீர்மானம் தருவது எனவும் விமர்சித்தார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி தயங்குவது ஏன் எனவும், வாஷிங்டன் செல்ல நேரமிருக்கும் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லையா எனவும் அடுக்கடுக்காக கார்கே கேள்வியெழுப்பியது குறிப்பிடத்தக்கது.