டெல்லி: பிரதமர் தலைமையில் என்.டி.ஏ. ஆலோசனை கூட்டம்..!

டெல்லி:  பிரதமர் தலைமையில் என்.டி.ஏ. ஆலோசனை கூட்டம்..!

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி  கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

இதை முறியடிக்கும் வகையில் பாஜக தனது கூட்டணி கட்சி  தலைவர்கள் கூட்டத்தை கூட்டியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜித்தன் ராம் மஞ்சி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர், கூட்டணி கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட மாலை ஒன்றை அணிவித்து வாழ்த்து 
தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில்  மக்களவைத் தேர்தல் குறித்த ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள்,எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.இந்த கூட்டத்தின் போது, பிரதமர் மோடிக்கு அரு கே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டு முக்கியததுவம் அளிக்கப்பட்டது. 

இதில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் அஜித் பவார், இந்திய குடியரசு கட்சியின் ராம்தாஸ் அத்வாலே, லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான், நாகாலாந்து முதலமைச்சர் நெய்பியு ரியோ, மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் உட்பட 38 அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

இதேபோல், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி. கே.வாசன், பா.ம.க.சார்பில் ஏ. கே.மூர்த்தி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, ஐ.ஜே. கே. தலைவர் பாரிவேந்தர்,உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர்.

இதையும் படிக்க   | ஊழல் தொடர்பாக எதிர்கட்சிகள் விவாதிக்கும் - பிரதமர் மோடி.