டிவிட்டர் இந்திய நிறுவனத்தை சாடிய டெல்லி உயர்நீதிமன்றம்

குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க, தங்களது தேவைக்கு ஏற்றபடி நேரத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என டிவிட்டர் இந்தியா நிறுவனத்தை டெல்லி உயர்நீதிமன்றம் சாடியுள்ளது. 

டிவிட்டர் இந்திய நிறுவனத்தை சாடிய டெல்லி உயர்நீதிமன்றம்

50 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்ட சமூக ஊடக நிறுவனங்கள், இந்திய பயனர்களின் புகார்களைக் கையாள்வதற்கு ஒரு குறை தீர்க்கும் அதிகாரி, ஒரு முதன்மை இணக்க அதிகாரி மற்றும் மாவட்ட அளவில் ஒரு நோடல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டு புதிய ஐடி விதிகளை மத்திய அரசு வெளியிட்டது. 

ஆனால் அதற்கு பிற ஊடகங்கள் இணங்கியிருக்க டிவிட்டர் இந்தியா மட்டுமே காலம் தாழ்த்தியது. பின்னர் ஒரு வழியாக இந்திய பயனர்களின் புகார்களை தீர்ப்பதற்கு, டிவிட்டர் இந்தியா நிறுவனம் இடைக்கால குறை தீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திர சாதுரை நியமித்தது.

இருப்பினும் பிற விதிகளுக்கு இணங்க மறுத்ததாக கூறி, டிவிட்டர் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சட்ட பாதுகாப்பினை நீக்கி,  மத்திய அர சு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனால் இருதரப்பினர்  இடையே மோதல் போக்கு நீடித்தது. டிவிட்டர் மீது வரிசையாக வழக்குகளும் தொடரப்பட்டன. இதன் ஒரு பகுதியாக பொறுப்பேற்ற சில தினங்களிலேயே  தர்மேந்திர சாதுரும் விலகினார். அதையடுத்து அப்பொறுப்பில்  கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜெர்மி கெசல் நியமனம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் இந்தியர் ஒருவரை குறை தீர்க்கும் அதிகாரியாக நியமிக்க  டிவிட்டர் தவறிவிட்டதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.  

மேலும், புதிய கொள்கையை பின்பற்றுவதற்கு 3 மாத  காலஅவகாசம் வழங்கியும் டிவிட்டர் இணங்கவில்லை எனவும், அதன்காரணமாகவே டிவிட்டர் இந்தியா  சட்டப்பாதுகாப்பை இழந்ததாகவும் தெரிவித்துள்ளது. 

இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்திய அரசின் சட்டத்திட்டத்திற்கு இணங்க, தேவைக்கு ஏற்றால் போல் நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது என டிவிட்டர் இந்தியாவை சாடியுள்ளது.