செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட கூடும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி

மத்திய பொதுத்துறை நிறுவனமான பார்த் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியை முதல்முறையாக 2 வயது முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு செலுத்துவது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடைபெற்று வருகிறது. 12 முதல் 18 வயதுடைய சிறார்கள், 2  முதல் 6 மற்றும் 6  முதல் 12 வயதுடைய குழந்தைகள் என 3 பிரிவுகளாக இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆய்வானது நாடு முழுவதும் உள்ள உடல்வலிமைமிக்க 525 தன்னார்வலர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. அவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 28 நாட்கள் கழித்து 2 ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தி பரிசோதிக்கப்பட உள்ளது. அதன்படி 2 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டுவிட்ட நிலையில் தற்போது  2 ஆம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இச்சோதனை அடுத்த வாரம் தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியாவில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு வரும் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட கூடும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கோவாக்சின், பைசர் மற்றும் சைடஸ் காடில்லா நிறுவனங்களின் தடுப்பூசிகள் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.