இந்தியாவில் விரைவில் கொரோனா மூன்றாம் அலை?  வல்லுநர்கள் எச்சரிக்கை...

இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை அக்டோபர் முதல் டிசம்பருக்குள் உருவாக வாய்ப்பிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் விரைவில் கொரோனா மூன்றாம் அலை?  வல்லுநர்கள் எச்சரிக்கை...

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் கடுமையான பாதிப்பு ஏற்படுத்திய நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியா பெரும் சவலை சந்தித்தது.இந்த நிலையில் மூன்றாம் அலை இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கைலாஷ் மருத்துவமனைக் குழுமத்தின் தலைவர் டாக்டர் மகேஷ் ஷர்மா அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்துக்குள் மூன்றாம் அலை உருவாக வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலைக்கு நாம் தயார்நிலையில் இல்லை, மருத்துவர்களும், மருத்துவ சேவை ஊழியர்களும் மனதளவில் தயாராகவில்லை என்று கூறிய அவர், தயாராக இருந்திருந்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடு, ரெம்டெசிவிர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது என்று கூறினார்.

இரண்டாம் அலை போன்ற பலமான மூன்றாம் அலை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் பெரும்பாலானோர் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் என கூறினார். எனவே இவர்கள் அனைவரும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர் என்று தெரிவித்தார். அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு நாம் எச்சரிக்கையாக இருந்தால், ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு குறையும் என்று அவர் கூறியுள்ளார். பண்டிகைக்காலம் தொடங்கியுள்ளதால் நாம் எச்சரிக்கையுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரந்தீப் குலெரியா எச்சரித்துள்ளார்.