சர்ச்சையில் சிக்கிய சஜி செரியன் பதவி விலகல்

சர்ச்சையில் சிக்கிய சஜி செரியன் பதவி விலகல்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, கேரள அமைச்சர் சஜி செரியன், மாநில சட்டப்பேரவையில் வருத்தம் தெரிவித்ததோடு, அரசியலமைப்பை மதிப்பதாகவும் விளக்கம் அளித்தார். ஆனால் தனது கருத்துகள் திரித்துக் கூறப்படுகின்றன என்றும் கவலை தெரிவித்துள்ளார்.  
இந்திய அரசியலமைப்பை மதிப்பதாகவும், நமது அரசியலமைப்பின் மேன்மையை நிலைநிறுத்தும் அரசியல்வாதி தான் எனவும் கூறினார். அரசியல் சாசனத்தை விமர்சித்ததாக வெளியான செய்தி திரித்துக் கூறப்பட்டுள்ளது எனவும் அதற்காக தான் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்பதாகவும்  செரியன் குறிப்பிட்டார்.  

இதைக் குறித்து மேலும் விளக்கம் அளிக்கும் போது தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுவதும் புதிய தொழிலாளர் குறியீடுகளை திணிப்பதும் தொழிலாளர்களை உச்சகட்ட சுரண்டலுக்கு வழிவகுக்கும் என்பதையே சுட்டிக்காட்ட முயற்சித்ததாகவும் மேலே கூறிய சிக்கல்களைப் பற்றி  வலுவான வார்த்தைகளில் பேசும் போது, கூற வந்த கருத்தை தவறாகப் புரிந்துகொள்ள வழிவகுத்தது எனக் கூறி  ஆழ்ந்த வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டார் செரியன்.

அனைவருக்கும் நிதிப் பாதுகாப்பும் சமூக நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், அதைச் சுரண்டுவது நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களைப் பாதிக்கும் என்றும் அரசியலமைப்பின் வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார்.


நாட்டில் அதிகரித்து வரும் சமத்துவமின்மையை குறைக்கும் வகையில் அரசியலமைப்பு வலுவாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
”வழிகாட்டு நெறிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் நாட்டில் வளர்ந்து வரும் சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடும் அளவுக்கு அரசியலமைப்பு வலுவாக இருக்காது” இதையே அவர் சொல்ல முயன்றதாக தெரிவித்தார்.
தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெறுவது மற்றும் புதிய சட்டங்களை திணிப்பது குறித்த தனது கருத்துக்கள் மிகவும் வலுவான வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டு தவறான விளக்கத்திற்கு வழிவகுத்தது என்றும் செரியன் தெளிவுபடுத்தினார்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியில் சிபிஐ-எம் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேரள அமைச்சர் செரியன், “இந்திய அரசியலமைப்பு மக்களைச் சுரண்டக்கூடியது” என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் உள்ளிட்ட பலர் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதைக்குறித்து சதீசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து கேரள அமைச்சர் சஜி செரியன் மிகவும் இழிவான கருத்துக்களைக் கூறியுள்ளார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது முதல்வர் பதவி விலக வேண்டும்” என்று எழுதியுள்ளார்.

அரசியல் சாசனத்திற்கு எதிரான தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், கேரள அமைச்சர் சஜி செரியன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.