5 ஆண்டில் 2 முதல்வர்கள் பதவி விலகல்... புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று ஆலோசனை

உத்தரகாண்டில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பான பாஜக எம்எல்ஏக்களின் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது. 

5 ஆண்டில் 2 முதல்வர்கள் பதவி விலகல்... புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக இன்று ஆலோசனை

உத்தரகாண்டில்  கடந்த 4 ஆண்டுகளாக பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த மார்ச் 10 ஆம் தேதி ஏற்கனவே முதல்வராக இருந்த திருவேந்திர சிங் ராவத்துக்கு பதிலாக  தீரத் சிங் ராவத் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

ஆனால் அவர் பதவியேற்றது முதல், கொரோனா காலக்கட்டத்தில் கும்பமேளா நடத்திய உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பூதாகரமாக வெடித்தது. மேலும் அவரது நிர்வாகம் சரியில்லை எனவும் மாநில பாஜகவினர் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 

இதுகுறித்து ஆலோசித்து வந்த பாஜக தலைமை, தீரத் சிங் அவரது பதவியை ராஜினாமா செய்ய அறிவுறுத்தியது. இதனை ஏற்று நேற்றிரவு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில ஆளுநர் பேபி ராணி மவுரியாவிடம் வழங்கினார்.

இதனிடையே ஆட்சிப்பொறுப்பேற்ற 115 நாட்களிலேயே, அரசியல் நெருக்கடியை காரணம் காட்டி  தீரத் சிங் பதவி விலகியதை காங்கிரஸ் விமர்சித்திருந்தது. மேலும் 5 ஆண்டு ஆட்சி காலத்திற்குள் 3 முதல்வர்கள் மாற்றப்பட்டு விட்டதாக கேலி செய்திருந்தது. 

இந்தநிலையில், உத்தரகாண்டில் ஆட்சி கவிழ்வதை தடுக்கும் விதமாக அடுத்த கட்ட முயற்சிகளை பாஜக மேற்கொண்டுள்ளது. இதற்கென இன்று மதியம் 3 மணியளவில் பாஜக எம்எல்ஏக்களை கூட்டி ஆலோசனை நடத்தவும் பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காகவே டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் நேரந்திர சிங் தோமர் உத்தரகாண்ட் விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.