25 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்த செல்போன் நிறுவனங்கள்...

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திடீரென கட்டணத்தை 25 சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

25 சதவீதம் கட்டண உயர்வை அறிவித்த செல்போன் நிறுவனங்கள்...

இந்தியாவில் 80 சதவீதம் பேர் செல்போன்களை பயன்படுத்துவதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பி.எஸ்.என்.எல்., பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடஃபோன் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்கள் இந்தியாவில் மக்களுக்குத் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வரும் முன்னணி நிறுவனங்களாக உள்ளன. இதில் தற்போது பி.எஸ்.என்.எல். தவிர மற்ற நிறுவனங்கள் தங்களின் சலுகைக் கட்டணத் தொகையை அதிரடியாக அதிகரித்துள்ளன. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஒரு நிறுவனம் (ஏர்டெல்) ப்ரீபெய்டு திட்டங்களுக்கான சலுகைக் கட்டணத்தை நவம்பர் 26 ஆம் தேதியில் இருந்து 20 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. இதன்படி, ரூ.48 ஆக இருந்த அடிப்படை டாப்-அப் திட்டம் ரூ.10 அதிகரிக்கப்பட்டு தற்போது ரூ.58-ஆக உள்ளது. இந்தத் திட்டத்தில் 3 ஜி.பி. வரை டேட்டா வழங்கப்படுகிறது.

அதேபோல, ரூ.98 கட்டணத்தில் 12 ஜிபி வழங்கப்பட்டு வந்த திட்டம், ரூ.20 அதிகரிக்கப்பட்டு ரூ.118 ஆகவும், ரூ.251-இல் 50 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டு வந்த திட்டம், ரூ.50 அதிகரிக்கப்பட்டு ரூ.301-ஆகவும் ஆகியுள்ளது. மேலும், அளவற்ற (அன்லிமிடெட்) வசதியுடன் பேசும் திட்டங்களுக்கான கட்டணங்களும், ஆண்டு முழுவதுக்குமான அளவற்ற பேசும் சேவையும், டேட்டாவுடன் கூடிய திட்டங்களின் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் பிரபலமான 4 தொலைத்தொடர்பு நிறுவனங்களில் குறைவான கட்டணத்துடன் சேவை வழங்கி வந்த ரிலையன்ஸ் ஜியோவும் தனது சலுகைக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, 28 நாள்களுக்கு, தினசரி 50 இலவச குறுந்தகவல் சேவை, 3 ஜி.பி. டேட்டாவுடன் ரூ.75 க்கு வழங்கப்பட்டு வந்த அடிப்படை சேவை கட்டணமானது, ரூ. 16 அதிகரித்து ரூ.91 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மற்ற திட்டங்களுக்கான கட்டணங்களையும் அதிகபட்சம் ரூ.480 வரை உயர்த்தியுள்ளது.

இந்தியாவின் மற்றொரு பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் (வோடாஃபோன்) ரூ.79 சலுகைக் கட்டணத்தை ரூ.99-ஆக உயர்த்தியுள்ளது. 2 ஜி.பி. டேட்டாவுடன் அளவில்லாத பேசும் வசதியை ரூ.149க்கு வழங்கிய இந்த நிறுவனம், தற்போது, இச்சேவையை ரூ.179=ஆக உயர்த்தியுள்ளது. அதே போலவே அனைத்து சேவைகளுக்குமான கட்டணங்களையும் அந்நிறுவனம் அதிகபட்சம் ரூ.500 வரை உயர்த்தியுள்ளது.

மத்திய அரசுக்கு ரூ.92 ஆயிரத்து 641 கோடி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளன. அதே நேரம் செப்டம்பருடன் முடிந்த காலாண்டில், வோடஃபோன் ரூ.54 ஆயிரம் கோடியும், ஏர்டெல் ரூ.23 ஆயிரம் கோடியும் நஷ்டத்தைப் பதிவு செய்துள்ளன. அரசுக்குப் பணம் செலுத்துவதுடன் நஷ்டத்தையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள ஏர்டெல்லும் வோடஃபோனும் கட்டண உயர்வை அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக 25 சதவீதம் கட்டணத்தை உயர்த்தியுள்ளது வருத்தமளிக்கிறது. இணைய வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், குழு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இணைய வசதியுடன் கூடிய ஆன்ட்ராய்டு கைப்பேசிகள் பெரும் பயனளிப்பதாக உள்ளன. தற்போதைய கட்டண உயர்வு, நடுத்தர மற்றும் அடித்தட்டு நிலையில் உள்ள மாணவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இணையத்துக்கு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் ஒதுக்குவதில் அவர்களுக்கு சிரமம் ஏற்படும். ஏழை மக்களைக் கருத்தில் கொண்டு, ஒரு பாதி கட்டண உயர்வை மட்டும் தற்போது அமல்படுத்திவிட்டு, மீதத்தை அடுத்த ஆண்டு அமல்படுத்தியிருக்கலாம் என்றார்.