உ.பி கலவரம், வன்முறையில் 8 பேர் பலி- மத்திய இணை அமைச்சர்  மகன் மீது வழக்குப்பதிவு  

உத்தரப்பிரதேசத்தில் வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

உ.பி கலவரம், வன்முறையில் 8 பேர் பலி- மத்திய இணை அமைச்சர்  மகன் மீது வழக்குப்பதிவு   

வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு வட மாநிலங்களில், தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் அரசு விழாவில் பங்கேற்க, அம்மாநில துணை முதலமைச்சர் சென்றுள்ளார். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், துணை முதலமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே, விவசாயிகளின் கூட்டத்தில் புகுந்து கார் மோதியதில், 3 விவசாயிகள் உயிரிழந்த நிலையில், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். இதனால் கலவரம் வெடித்தது. துணை முதலமைச்சரின் கார் உட்பட 3 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். கலவரம் மற்றும் வன்முறை காரணமாக விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் சென்ற கார்தான், விவசாயிகள் கூட்டத்தில் புகுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ இடத்தில் தமது மகன் இல்லை என, மிஷ்ரா விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் வன்முறை சம்பவம் தொடர்பாக விவசாயிகள் தரப்பில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது லக்கிம்பூர்  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ரா-வை பதவி நீக்கம் செய்ய கோரியும், இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு மற்றும் அரசு வேலை வழங்க கோரியும், வன்முறை சம்பவம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிடக்கோரியும் விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறை சம்பவத்துக்கு காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பல்வேறு தலைவர்களும் இன்று சம்பவ இடத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் லக்கிம்பூர் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் பல முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.