எதிர்கட்சிகளை தாக்கும் பாஜக.....

எதிர்கட்சிகளை தாக்கும் பாஜக.....

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் அவருடைய “கட்டுப்பாடற்ற நடத்தைக்காக" மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த மூன்று நாள்களுக்கு அவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  இதற்கு முன்னரே திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் 19 எம்.பி.க்கள் சபை நடவடிக்கைகளை சீர்குலைத்ததாகக் கூறி சபையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சஞ்சய் சிங் கேள்வி:

குஜராத் மாநிலத்தில் கள்ள சாராயம் குடித்ததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த பிரச்னையை, சபையில் சிங் எழுப்பினார்.

இடைநீக்க தீர்மானம் முன்மொழிவு:

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி.முரளீதரன், சிங்கை ஒரு வாரம் முழுவதும் சபையில் இருந்து இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்வைத்தார். 

மாநிலங்களவை துணைத் தலைவர்:

மதியம் 12 மணிக்கு கேள்வி நேரத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் விதி 256யை அவையில் செயல்படுத்தினார்.

சிங்கின் நடவடிக்கைகள் அவை தலைவரின் அதிகாரத்தை முற்றிலும் புறக்கணிப்பதாக இருந்தது என துணைத் தலைவர் கூறினார்.

இடைநீக்க தீர்மானம்:

சிங்கை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மாநிலங்களவையின் தலைவர் இன்று ஏற்றுக்கொண்டார். அதைக் குறித்து மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் கூறுகையில், “கோஷம் எழுப்பியதற்காகவும், காகிதங்களைக் கிழித்ததற்காகவும், அவற்றை நாற்காலியை நோக்கி வீசியதற்காகவும்” ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மழைக்கால கூட்டத்தொடரின் அடுத்த மூன்று நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக கூறினார்.

தீர்மானம் மாநிலங்களவைத் தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் அவையின் துணைத் தலைவர் சிங்கை சபையை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்.

எதிர்கட்சிகளை குறி வைத்து தாக்குகிறதா பாஜக:

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டதொடர் தொடங்கும் முன்னரே நாடாளுமன்றத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் என்று ஒரு தொகுப்பை மக்களவையின் பொதுசெயலாளரால் வெளியிடப்பட்டது.  இதற்கு எதிர்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்தன.   மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாளிலிருந்தே அமைச்சரவையின் பல்வேறு தீர்மானங்களை எதிர்த்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.  திமுக எம்பிக்களான அகமது அப்துல்லா, கல்யாண சுந்தரம், சண்முகம், கனிமொழி என்விஎன் சோமு உள்ளிட்ட 19 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இது போன்ற நடவடிக்கைகள் பாஜகவின் ஒடுக்க நடவடிக்கைகளாக உள்ளது.

திமுக எம்பி ஆ. ராசா கோரிக்கை:

மாநிலங்களவையில் நடந்தது வளமான ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.  ஆள்ங்கட்சி சார்பிலும் எதிர்கட்சி சார்பிலும் நான் பல காலமாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறேன். ஜனநாயக முறையில் பதாகையேந்தி போராட்டம் நடத்துவது இந்த அவைக்கு புதிது அல்ல.  அதிர்ஷ்டவசமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக போராட்டக்காரர்கள் அவை தலைமையால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.  கைக்கூப்பி சொல்கிறேன் இந்த அவையில் எண்ணிக்கையின் பலத்தை மட்டும் நம்ப வேண்டாம்.  நீங்கள் ஒருவேளை எண்ணிக்கையின் பலத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம்.  ஆனால் ஆரோக்கியமான விவாதம் எப்பொதுமே எண்ணிக்கையின் பலத்தின் முன் நிற்காது.  எங்களுக்கு ஜனநாயகம் வேண்டும்.  மறுபரிசீலனை செய்து இடைநீக்க முடிவை திரும்ப பெற வேண்டும்.  அதன் பிறகு நாங்கள் விவாதத்தில் கலந்து கொள்வோம்.  இடைநீக்கத்தை திரும்ப பெற வேண்டும் என மீண்டும் திமுகவின் சார்பில் கேட்டுகொள்கிறேன் என ஆ. ராசா கோரிக்கை வைத்துள்ளார்.