ஆட்சியை இழந்த உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் ஒரு நெருக்கடி:

ஆட்சியை இழந்த உத்தவ் தாக்கரேவுக்கு மேலும் ஒரு நெருக்கடி:

பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கிடையே பதவி விலகிய மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் கொறடாவை மாற்றியுள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சியாக இருந்த சிவசேனாவின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே உடன் கூட்டணி அமைத்து பாஜக புதிய அரசு அமைத்தது.  நம்பிக்கை தீர்மானத்தில் உத்தவ் தாக்கரே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார்.  சட்டமன்றத்தில் புதிய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்காத உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் 16 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்காததைத் தொடர்ந்து அவர்களை பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற அறிவிப்பை ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் கொறடா நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

யாருடைய தலைமையிலான அணி உண்மையான சிவசேனா கட்சி என்ற போட்டி ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே நிலவி வருகிறது.  மகாராஷ்டிரா சபாநாயகர் ஏற்கனவே ஷிண்டே தலைமையிலான அணியையே சிவசேனா கட்சியாக அங்கீகரித்துள்ள நிலையில் மீண்டும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கின் விசாரணை வரும் 11 அன்று நடைபெறவுள்ளது. 

சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்ட நிலையில் தற்போது நாடாளுமன்றத்திலும் உத்தவ் தாக்கரே கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்தில் மக்களவையில் 19 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களும் சிவசேனா கட்சி எம்.பிக்கள் உள்ளனர்.  இவர்களில் மக்களவை உறுப்பினர்களில் 12 பேர் ஷிண்டேவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிகிறது.  இந்நிலையில் அவர்களை தக்கவைத்துக்கொள்வதில் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார்.  இதன் காரணமாகவே மக்களவையில் சிவசேனாவின் கொறடாவை மாற்றியதாக தெரிகிறது. பாவ்னா காவ்லியை மாற்றி ராஜன் விச்சாரே என்பவரை கொறடாவாக நியமித்து இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மக்களவை சபாநாயகரிடம் மனுக்கொடுத்து இருக்கிறார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் எந்த அணிக்கு அதிக ஆதரவு உள்ளதோ அவர்களையே சிவசேனா கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும்.  ஏற்கனவே சட்டமன்றத்தில் ஆதரவை இழந்த நிலையில் நாடாளுமன்றத்தில் அதிகாரத்தை தக்க வைக்க உத்தவ் தாக்கரே போராடி வருகிறார். உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூட்டிய எம்.பி.க்கள் கூட்டத்தில் இரண்டு எம்.பி.க்கள் கலந்து கொள்ளவில்லை.

மீண்டும் உத்தவ் தாக்கரே தலைமைக்கு திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என்று ஏக்நாத் ஷிண்டே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.