அஜய் மிஸ்ராவுக்கு போலீசார் சல்யூட்  அடித்தால் விசாரணை நியாயமாக இருக்குமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி...

வன்முறை சம்பவத்தில் உண்மை நிலையை மக்கள் அறிய கூடாது என்பதற்காக இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாக உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் விமர்சித்துள்ளார். 

அஜய் மிஸ்ராவுக்கு போலீசார் சல்யூட்  அடித்தால் விசாரணை நியாயமாக இருக்குமா..? அகிலேஷ் யாதவ் கேள்வி...

உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் புகுந்ததில்  4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பொரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ஒரு நாளில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என  உத்தரவிட்டது. 

இதையடுத்து  விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக  ஆஷிஷுக்கு நெருக்கமான லவகுசா ராணா, ஆஷிஷ் பாண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேலும்  அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷை கைது செய்ய ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வலியுறுத்தி வருகிறார்கள் 

இந்த நிலையில்  உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நேற்று இரவு பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை  நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகன் ஆகிய இருவருக்கும் இச்சம்பவதில் தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார். மத்திய இணை அமைச்சர் பதவி விலகினால் மட்டுமே நியாயமாக விசாரணை நடத்த முடியும் எனவும் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 

மேலும் வன்முறை சம்பவத்தில் உண்மை நிலையை தெளிவாக விளக்கும் வகையிலான பல வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருவதாகவும், ஆனால் அதனை பார்த்தோ பிறகுக்கு பகிர்ந்தோ மக்கள் உண்மையை அறிந்திர கூடாது என்பதற்காக இப்பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார்.