எஸ்.எஸ்.எல்.வி என்ற புதிய வகை ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது...!

எஸ்.எஸ்.எல்.வி என்ற புதிய வகை ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது...!

எஸ்.எஸ்.எல்.வி., என்ற புதிய வகை ராக்கெட் இரண்டு செயற்கை கோள்களை சுமந்தபடி, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து, நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது.

செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ:

இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம், பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துகிறது. அதில் பி.எஸ்.எல்.வி., ராக்கெட், ஆயிரத்து 860 கிலோ வரையிலும், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட், நான்காயிரம் கிலோ வரையிலும் உடைய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறன் உடையவை.

புதிய ராக்கெட்:

தொடர்ந்து இஸ்ரோ, 'மைக்ரோ, நானோ' என்ற 500 கிலோ வரை உடைய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் வகையில், எஸ்.எஸ்.எல்.வி., எனப்படும், 'ஸ்மால் சேட்டிலைட் லாஞ்ச் வெகிக்கிள்' ராக்கெட்டை வடிவமைத்துள்ளது. இதன் செலவு, பி.எஸ்.எல்.வி., - ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்களின் செலவுகளை விட குறைவாகும்.

முதன்முதலாக செல்லும் எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்:

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து முதலாவது எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட், இ.ஓ.எஸ்., - 02, ஆசாதிசாட் ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களை சுமந்தபடி, நாளை காலை, 9 மணியளவில் விண்ணில் பாய்கிறது.

மாணவிகள் கண்டுபிடித்த மென்பொருள்:

நாளை பாயவுள்ள, 145 கிலோ எடை உடைய, 'இ.ஓ.எஸ்., - 02' செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்க கூடியது. மேலும், 8 கிலோ எடை உடைய  'ஆசாதிசாட்' செயற்கைக் கோளானது கிராமங்களில் உள்ள, 75 பள்ளிகளை சேர்ந்த மாணவியர் உருவாக்கிய மென்பொருளை உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, 'ஆசாதிசாட்' செயற்கைக் கோளின் மென்பொருளை உருவாக்கிய மாணவிகளுக்கு நாளை நடக்கவிருக்கும் செயற்கை கோள் ஏவுதல் நிகழ்ச்சிக்கு இஸ்ரோ அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.