அலங்கார மாற்றமே!!!-பாஜக விமர்சனம்

அலங்கார மாற்றமே!!!-பாஜக விமர்சனம்

மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், குரூப்-சி மற்றும் டி பணியாளர்கள் நியமனம் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் ஆகியவற்றில் நடந்த முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்தது. இந்த ஊழலில் பணப் பரிமாற்றம் தொடர்பான முறைகேடுகளை அமலாக்க துறை விசாரித்தது. 

பார்த்தா சாட்டர்ஜி கைது:

ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கில் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியை அமலாக்க துறை அதிகாரிகள் 11 மணிநேர விசாரணைக்கு பின் கைது செய்தனர்.  இந்த ஊழல் நடந்தபோது சாட்டர்ஜி மாநில கல்வி அமைச்சராக இருந்தார்

கொல்கத்தாவில் உள்ள சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து 20 கோடி ரூபாயை அமலாக்க துறை அதிகாரிகள் கைப்பற்றியதை தொடர்ந்து பார்த்தா கைது செய்யப்பட்டார்.

அமைச்சரவை மாற்றம்:

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று அவருடைய அமைச்சரவையை மாற்றி அமைப்பதாக அறிவித்துள்ளார். இந்த மறுசீரமைப்பு மிகப் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபுல் சுப்ரியோ,தபஸ் ரே, பார்த்தா பௌமிக், சினேகஸ் சக்ரவர்த்தி மற்றும் உதயன் குஹா ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்புள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு ஊழல் தொடர்பான விவகாரத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடும் கொந்தளிப்பை சந்தித்து வரும் இந்த நேரத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மம்தா பானர்ஜி:

ஆகஸ்ட் 1ம் தேது செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி  அமைச்சரவை மாற்றத்தின் போது 4 முதல் 5 புதிய முகங்கள் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார். அதே நேரத்தில் அதே எண்ணிக்கையிலான அமைச்சர்கள் கட்சிப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவித்திருந்தார்.

அமைச்சரவையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் ஆனால் அமைச்சரவையை கலைத்துவிட்டு புதிய அமைச்சரவையை கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை எனவும் மம்தா கூறியுள்ளார். தன்னால் மட்டும் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க முடியாது எனவும்  நான்கு முதல் ஐந்து புதிய உறுப்பினர்கள் அமைச்சரவையில் அறிமுகப்படுத்தப்படுவார்கள் எனவும் மேற்கு வங்க முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு மேற்கு வங்க பஞ்சாயத்துத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் அதன் மாவட்ட அளவிலான அமைப்புகளிலும் ஒரு பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

ஒப்பனை மாற்றமே..!

இந்த ஒப்பனை மாற்றங்கள் கண் துடைப்பிற்காக மட்டுமே எனவும் இது எந்தப் பலனையும் தராது எனவும் பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார் கூறியுள்ளார். மேலும்,  திரிணாமுல் காங்கிரஸ் கட்டமைப்பு ரீதியாக ஊழல் கட்சி என்பது தெளிவாகிறது எனவும்  சுகந்தா மஜும்தார் கூறியுள்ளார்.

கடந்த 11 வருடங்களாக அமைச்சரவையில் எவ்வித மாற்றத்தையும் செய்யாத மம்தா அரசு தற்போது அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவித்திருப்பது பல விமர்சனங்களையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.