அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்: பல்வேறு மாநிலங்களில் போராட்டக்காரர்களாக குதித்த இளைஞர்கள்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வலுக்கும் போராட்டம்: பல்வேறு மாநிலங்களில் போராட்டக்காரர்களாக குதித்த இளைஞர்கள்!

ராணுவம், கடற்படை, விமானப் படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வகை செய்யும் ‘அக்னி பாதை’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. 4 ஆண்டுகள் பணிக்கு பின்னர் 80 சதவீதம் பேர் ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்படுவர் என்றும் மேலும் 20 சதவீதம் பேர் மட்டுமே ராணுவப் பணியை தொடர முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு படைகளின் செலவின குறைப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் கடந்த 2 நாட்களாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பீகார், உத்திரபிரதேசத்தில்  ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள், மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக நேற்று பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் சமஸ்திபூரில் பயணிகள் ரயிலின் 2 பெட்டிகளுக்கு இளைஞர்கள் தீ வைத்தனர். 

இந்த நிலையில் 2-வது நாளான இன்று பீகார், உத்திரப்பிரதேசம், கொல்கத்தா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், 

பீகாரில் இன்று 2-வது நாளாக போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள் லக்மினியா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயிலுக்கு தீ வைத்து கொழுத்தினர். மேலும் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கியதுடன் ரயில் நிலைய அலுவலகங்களுக்கும் தீ வைத்து கொளுத்தினர். இதனிடையே, பீகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலின் வீடு போராட்டகாரர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.  

இதேபோல் உத்திரப்பிரதேசத்தின், பல்லியா ரயில் நிலையத்தில் கூட்டமாக நுழைந்த போராட்டகாரர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியதுடன் ரயில் நிலையத்தையும் நாசப்படுத்தினர்.
 
கொல்கத்தாலும் ஹவுரா பாலத்தில் திரண்ட ஏராளமான இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதேபோல் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மற்றும் செகந்தரா பாத் பகுதிகளிலும் போராட்டம் வெடித்துள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு நுழைந்த ஏராளமான இளைஞர்கள் ரயிலுக்கு தீ வைத்து கொழுத்தினர். இதனால் ரயில் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்த நிலையில் போலீசார் அதனை அணைக்க முயன்று வருகின்றனர். மேலுல் ரயில் நிலையத்தில் இருந்த கடைகள் சேதப்படுத்தப்பட்டு, ரயில் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 

இதனால் நாடுமுழுவதும் 35க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு 200க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.