ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை - சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை - சூரத் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

மோடி சமூக பெயர் சர்ச்சை விவகாரத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது எல்லா திருடர்களும் ஏன் மோடி என்ற குடும்பப் பெயரை வைத்துள்ளனர் என விமர்சித்ததாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல்காந்தி இழிவுபடுத்தியதாக பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதையும் படிக்க : கிருஷ்ணகிரி ஜெகன் உயிரிழப்பு தொடர்பாக ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம்... பதிலளித்த முதலமைச்சர்!

இதன் இறுதிக்கட்ட விசாரணை கடந்த 17ம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜராக ராகுல்காந்திக்கு உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து நீதிமன்றத்தில் இன்று ராகுல்காந்தி நேரில் ஆஜரான நிலையில், அவரைக் குற்றவாளி என நீதிபதிகள் அறிவித்தனர். தொடர்ந்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம், ஜாமீனும் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றத்தின் வெளியே காங்கிரஸ் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக மாலை முரசு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தீர்ப்பை எதிர்த்து சாலையில் இறங்கிப் போராடுவோம் என தெரிவித்தார்.