பாகுபலி வெப்தொடரில் ரம்யா கிருஷ்ணன் இல்லை? சிவகாமி தேவியாக நடிக்கும் வாமிகா கபி..!

ரம்யா கிருஷ்ணனுக்கு மாற்றாக வாமிகா..!

பாகுபலி வெப்தொடரில் ரம்யா கிருஷ்ணன் இல்லை? சிவகாமி தேவியாக நடிக்கும் வாமிகா கபி..!

2015-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் வெளியாகி உலக அளவில் பெருமளவு வரவேற்பை பெற்றப் படம் பாகுபலி. ரூ.250 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இப்படத்தை ராஜமௌலி இயக்கியிருந்தார்.

பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன், நாசர், தமன்னா என ஒரு நடிகர் நடிகர் பட்டாளமே நடித்திருந்த இந்தப் படம் இரண்டு பகுதியாக எடுக்கப்பட்டது. முதல் பகுதி 2015-ம் ஆண்டு வெளியான நிலையில் இரண்டாம் பகுதி 2017-ம் ஆண்டு வெளியானது. இரண்டு பகுதிகளுமே ரூ.500கோடிக்கும் மேல் வசூல் புரிந்து மிகப்பெரிய சாதனை படைத்தது. 

இப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் அனைத்துமே இன்று வரை அனைவரது மனதிலும் ஆணி அடித்தாற் போல் பதிந்துள்ளது. அந்த வகையில் ரம்யாகிருஷ்ணன் இதில் சிவகாமி தேவி என்ற கதாபாத்திரல் கன கச்சிதமாக நடித்திருந்தார். கம்பீரக் குரலாலும், நடிப்பாலும், மக்களிடம் வரவேற்பை பெற்றார். நீலாம்பரி என்ற பெயர் மாறி தற்போது சிவகாமி தேவி என அனைவராலும் அழைக்கப்படும் அளவுக்கு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு பொருந்தியது. 

தற்போது ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி வரும் நிலையில், அதை அடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்காக பாகுபலி என்ற வெப்தொடரை இயக்கவுள்ளார். 9 எபிசோடுகளில் தயாராகும் இந்தத் தொடர் ரூ.200கோடியில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வெப் தொடரிலும் சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தில் நடித்த ’வாமிகா கபி’ நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.