வாரிசு இசை வெளியீட்டு விழா...உற்சாகத்துடன் வரவேற்ற ரசிகர்கள்!

வாரிசு இசை வெளியீட்டு விழா...உற்சாகத்துடன் வரவேற்ற ரசிகர்கள்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வாரிசு இசைவெளியீட்டு விழா:

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. இன்று மாலை 4 மணி அளவில் விழா தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை முதலே நேரு விளையாட்டு அரங்கத்தில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். ஆடல், பாடல் என உற்சாகமாக இருந்த விஜய் ரசிகர்களால் நேரு விளையாட்டு அரங்கம் நாள் முழுவதும் களை கட்டியது. 

தடியடி நடத்தி விரட்டியடிக்கப்பட்ட விஜய் ரசிகர்கள்:

இதற்கிடையில் வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழா மேடை பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டது. நடிகர் விஜய்யின் சிறு வயது புகைப்படங்களைக் கொண்டு இதுவரை இல்லாத அளவுக்கு வண்ண மயமாக விழா மேடை வடிவமைக்கப்பட்டு இருந்தது. ரசிகர்கள் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டதும் ஏராளமானோர் முண்டி அடித்துக்கொண்டு நுழைந்தனர். இதற்கிடையில், 15 ஆண்டுகளாக நடிகர் விஜயைக் காணக் காத்திருந்த மாற்றுத் திறனாளி ரசிகர் ஒருவரும் விழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அரங்கத்திற்கு உள்ளே அனுமதிக்கப்படாத ரசிகர்கள் பலரை, காவல்துறையினர் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். நாள் முழுவதும் காத்திருந்த விஜய் ரசிகர்கள் விரட்டி அடிக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிக்க: பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுலுடன் களமிறங்கிய கமல்ஹாசன்...!

டார்ச் அடித்து வரவேற்ற ரசிகர்கள்:

இதைத் தொடர்ந்து விழாவில் பங்கேற்க இயக்குநர்கள் எஸ்.ஏ.சி, வம்சி, நடிகை ராஷ்மிகா மந்தானா, படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், சரத்குமார் உள்ளிட்ட பலர் வருகை தந்தனர். அவர்களுக்கு அடுத்து வந்த நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் செல்போன் டார்ச்சை அடித்து உற்சாக வரவேற்பளித்தனர். 

குட்டி ஸ்டோரியை கேட்க ஆவல்:

இதற்கடுத்தபடியாக வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நடிகர் விஜயைத் திரையிலும், திரைக்கு வெளியிலும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், இசை வெளியீட்டு விழாவில் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்கவே ஆர்வத்துடன் வந்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.