புகார் கொடுக்க சென்ற நிக்கி கல்ராணி மீது விசிக பிரமுகர் கம்பிளைண்ட்.. சிசிடிவியில் சிக்கிய வீடியோ

நடிகை நிக்கி கல்ராணியின் வீட்டில் 1.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடிய சென்ற பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புகார் கொடுக்க சென்ற நிக்கி கல்ராணி மீது விசிக பிரமுகர் கம்பிளைண்ட்.. சிசிடிவியில் சிக்கிய வீடியோ

மொட்ட சிவா கெட்ட சிவா, மரகத நாணயம் உட்பட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி. 

சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் படத்தில் கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இதனால் நிக்கி கல்ராணி சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் ஒன்றை அளித்துள்ளார். அ

ந்த புகாரில் தனது வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்பவரை நியமித்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி வீட்டில் வேலை பார்க்கக் கூடிய தனுஷ் வீட்டிலிருந்து சந்தேகத்திற்கிடமாக பையில் சில பொருட்களை எடுத்து சென்றதாகவும், அதை கண்டு தனுஷை பிடிக்கச் சென்றபோது தப்பி ஓடிவிட்டதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

பின்னர் வீட்டில் உள்ள பொருட்களை சோதனை செய்தபோது 40 ஆயிரம் மதிப்பிலான கேமரா, விலை உயர்ந்த துணிகள் மற்றும் சில பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். 

இதனையடுத்து தனது வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் பொருட்களை திருடிச் சென்றுள்ளார் என்ற அடிப்படையில் புகாரை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக அதே அண்ணா சாலை காவல் நிலையத்தில் விசிக பிரமுகரான செல்லதுரை, நடிகை நிக்கி கல்ராணி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.  

நடிகை நிக்கி கல்ராணி அவரது வீட்டில் வேலைப்பார்க்கும் தனுஷ் என்பவரை பொருட்களை திருடியதற்காக சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார்கள் என்றும், தனுஷின் பெற்றோர்கள் தன்னிடம் உதவி கேட்டுள்ளதாக புகாரில் தெரிவித்துள்ளார். 

மேலும் கடந்த 13 ஆம் தேதி தனுஷின் தாய் நாகவல்லி மற்றும் அவரது தந்தை சொந்த ஊரான விருதாச்சலத்தில் இருந்து சென்னை வந்து, தனது மகனை பல இடங்களில் தேடியும் காணவில்லை என்று  அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனால் குழப்பமடைந்த அண்ணா சாலை போலீசார் நிக்கி கல்ராணி வீட்டிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். அதில் தனுஷ் பொருட்களை திருடி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது உறுதியானது. 

இதை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருப்பூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் மறைந்திருந்த தனுஷை கைது செய்தனர்.

தனுஷிடம் நடத்திய விசாரணையில், நிக்கி கல்ராணியின் வீட்டில் திருடிய கேமராவை கோயம்புத்தூரில் ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டு, திருப்பூரில் தனது நண்பர் வீட்டில் தங்கி வந்ததாக தெரிவித்துள்ளார். 

மேலும் விருதாச்சலத்தில் உள்ள தனுஷின் வீட்டில் சோதனை செய்தபோது நாயின் முடி அகற்றும் இயந்திரம் மற்றும் நிக்கி கல்ராணியின் சில ஆடைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.