காலத்தால் அழியாத காவிய கவிஞன் வாலியின் 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி,.. இன்று..!

காலத்தால் அழியாத காவிய கவிஞன் வாலியின் 10-ம் ஆண்டு  நினைவு அஞ்சலி,.. இன்று..!

கவிஞர் வாலியின் பத்தாவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. திரையுலகில் 5 தலைமுறை நடிகர்களோடும் பயணித்து, கடைசி வரையிலும் வெற்றி ஒன்றையே கண்டு வந்தவர் காவியக் கவிஞர் வாலி.

தன்னை காலத்திற்கு ஏற்ப மாற்றி கொள்ள முயன்று தோற்றவர்கள் இருக்கும் பூமியில், ஒன்றல்ல இரண்டல்ல, சுமார் 55 ஆண்டுகள் காலத்தின் தேவைக்கேற்ப தன்னைத் தானே இழைத்து இழைத்துச் செதுக்கி, ஒருவர் வாலிபராகவே விளங்கி மறைந்துவிட முடியும் என்றால், அது வாலிபக் கவிஞர் வாலி மட்டுமே.. 

1931-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி பிறந்த ரங்கநாதனுக்கு, அவரது நண்பர் வைத்த பெயர்தான் வாலி.. 1958-ம் ஆண்டு அழகர் மலைக் கள்வன் திரைப்படத்தில் “நிலவும் தாரையும் நீயம்மா” என்ற பாடல் மூலம் கவியுலகில் அடியெடுத்து வைத்தவருக்கு, ஜெமினி கணேசன் நடிப்பில் வெளியான கற்பகம் திரைப்படமே திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

ஆரம்ப காலத்தில் வாலி எழுதிய திரைப்பாடல்கள் பலவற்றுக்கு பாராட்டும் அங்கீகாரமும் கவியரசு கண்ணதாசனையே சென்றடைந்தன. பாடல் வரிகளைக் கேட்ட ரசிகர்கள் இது கண்ணதாசன் எழுதியதாகவே இருக்கும் என எண்ணினர். அந்த எண்ணமே கவிஞர் வாலிக்கு சாம்ராஜ்யம் அமைத்தன. 

எம்.ஜி.ஆருக்காக எத்தனையோ பாடல்களை கொடுத்தாலும், கருணாநிதியுடனும் இணக்கமான உறவையும் கொண்டிருந்தார் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆரும் கருணாநிதியும் அரசியலில் இரு துருவங்களாக பிரிந்திருந்த வேளையிலும் வாலியின் அன்பில் ஒன்றிணைந்தே தோன்றினர். வாலி எழுத உட்கார்ந்த எம்.ஜி.ஆர் பாடல் ஒன்றுக்கு கருணாநிதி வரி எடுத்துக் கொடுத்ததெல்லாம் வரலாறு பொறித்து வைத்திருக்கும் பொன்னெழுத்துகள்.  இருபெரும் அரசியல் கட்சிகளுக்கு இடையே பயணப்பட்டாலும், வாலி என்ற கவிஞர் அரசியல் பிடிக்குள் அகப்படாமலேயே அகிலத்தையே ஆண்டு வந்தார். 

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் வரை தொடர்ந்தது வாலியின் வெற்றிப் பயணம். கருப்பு வெள்ளை காலத்தில் தொடங்கி எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், அஜித் - விஜய், சிம்பு - தனுஷ், சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி என ஐந்து தலைமுறை நடிகர்களைத் தம் பாட்டுத் தேரில் பவனி கூட்டிச் சென்றவர் கவிஞர் வாலி.

காலத்துக்கு ஏற்ற கவித்துவத்தைப் பாடலில் இழைத்து எழுதும் வித்தை கைவரப்பெற்ற கவிஞர் வாலி, அனைவருக்கும் விளங்கும் வகையில் எளிய சொற்களில் இனிய வார்த்தைகளைக் கோத்து, தன்னை எல்லா ஜானரிலும் வெற்றியடைய வைத்துக் கொண்டார். மூழ்காத ஷிப்பே பிரெண்ட்ஷிப்தான் என்ற வரிகளும், கோ என்பது முன் பார்த்தைதான் வா என்பது பின் வார்த்தைதான் என்ற வரிகள், காதல் வைரஸ் ஒன்று கண்டேன் என்ற வரிகள், முக்காலா, முக்காபுலா என்றும் எழுதி, ஹைடெக் கவிஞராக விளங்கினார். 

RememberingVaali: 10 iconic songs that Vaali gave AR Rahman | The Times of  India

தமிழ்த் திரைப்படங்களில் அம்மா செண்டிமென்ட் கதைக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு. அவ்வாறு அம்மாவைப் பற்றி பல பாடல்களை எழுதிக் குவித்தவர் வாலி. அம்மா என்றழைக்காத உயிரில்லையே, நானாக நானில்லை தாயே, சின்னத்தாயவள், காலையில் தினமும் கண்விழித்தால், ஆசைப்பட்ட எல்லாத்தையும் என்று பாடல்களைப் புனைந்து தாய்மையையும் போற்றி வந்தவர் வாலி. 

கவிஞராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பல்வேறு திரைப்படங்களில் திரையில் தோன்றியவர் 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். எங்கள் தங்கம், வருஷம் பதினாறு, அபூர்வ சகோதரர்கள், கேளடி கண்மணி, தசாவதாரம் ஆகிய திரைப்படங்களுக்காக தமிழ்நாடு மாநில விருதுகளை பெற்ற வாலிக்கு 2007-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

Live Chennai: Last Respects to Kavignar Vaali,Cine worlds tribute -  Kavinjar Vaali - Rajinikanth -VIjaya Kanth

1959-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானதில் இருந்து 2014-ம் ஆண்டு வரையிலும் 55 ஆண்டுகளாக நம்பர் ஒன் இடத்தையே பெற்று வந்தார் வாலி. மனதளவில் என்றுமே இளமையாகவே வாழ்ந்து வந்த கவிஞர் வாலி உடலளவில் முதுமையின் காரணமாக 2013-ம் ஆண்டு ஜூலை 18-ம் தேதியன்று மறைந்தார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை படைத்த வாலியின் பத்தாம் ஆண்டு நினைவு நாள் இன்று..!

இதையும் படிக்க    | தமிழ்நாடு நாள் ஜூலை 18 கடந்து வந்த வரலாறு...!