ஒரு தொலைக்காட்சி என்ன செய்யும்? 10 ஆண்டுகளில் 30 கலைஞர்களை உருவாக்கி சாதனை!

ஒரு தொலைக்காட்சி என்ன செய்யும்? 10 ஆண்டுகளில் 30 கலைஞர்களை உருவாக்கி சாதனை!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, 10 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட பாடகர்களைத் தமிழ் திரையுலகிற்கு, அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழின் முன்னணி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, 10 வருடங்களை கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது. ஜூனியர், சீனியர் என இரண்டு கட்டமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில், இளம் தலைமுறையினர் தங்கள் குரலால் திரைத்துறையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து கோலோச்சி வருகின்றனர். 

அதற்கு ஒருவகையில் அந்நிகழ்ச்சியில் ஜட்ஜாக கலந்துகொள்ளும் இசையமைப்பாளர்கள் தான் காரணம். பொதுவாக திறமையான பல்வேறு குழந்தைகளும், இளைஞர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்கள் ஏழ்மை நிலையினால் வெளியுலகிற்கு தெரியாமல் போய்விடுகின்றனர். இதனால் சிலர் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிபடுத்துவதால், ஜட்ஜாக வரும் இசையமைப்பாளர்கள் பலருக்கும் திரைத்துறையில் பாடுவதற்கு வாய்ப்பளித்து வருகின்றனர். இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள், ஏழ்மை நிலையில் இருக்கும் திறமையாளர்கள் பலர் இந்நிகழ்ச்சி மூலம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் நெகிழ்ச்சியான பற்பல அற்புத தருணங்களும் இந்நிகழ்ச்சியில் அரங்கேறியுள்ளது. 

தனியார் தொலைக்காட்சி மூலம், 30க்கும் மேற்பட்ட பாடகர்கள் இதுவரை திரைத்துறையில் கால் பதித்துள்ளனர். அந்த வகையில், ஜூனியரில் பூவையார், நித்யஶ்ரீ, ஹரிப்பிரியா, பிரியங்கா, பிரகதி குரு பிரசாத் ஆகியோரும், சீனியரில் பூஜா வைத்தியநாத், சத்திய பிரகாஷ், திவாகர், செந்தில் கணேஷ், ராஜலட்சுமி, ரக்‌ஷிதா சுரேஷ், ஷாம் விஷால், சிவாங்கி, யோகி சேகர், ஆதித்யா RK உள்ளிட்டோரும் தென்னிந்தியத் திரைத்துறையில் மிகச்சிறந்த  முன்னணி பாடகர்களாகக் கோலோச்சி வருகின்றனர். 

இதையும் படிக்க : Chennai Day : "அக்கம் பக்கம்" என்ற புகைப்பட கண்காட்சியினை திறந்து வைத்தார் முதலமைச்சர்!

மேலும் இசையமைப்பாளர் நடத்தும் வேர்ஃல்ட் டூர், வெளிநாட்டு இசை கச்சேரி, உள்நாட்டு இசைக்கச்சேரி என, பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர்களே பங்கு பெற்று வருகிறார்கள். திறமையாளர்களை வெளிச்சமிட்டுக் காட்டுவதுடன், அவர்களுக்கு வாய்ப்புகளைக் குவித்துத் தரும், புகலிடமாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி விளங்குகிறது. 

இந்நிலையில் தற்போது சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 9 நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியிலும் பல நெகிழ்வான தருணங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் நிகழ்ந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில், கலர்வெடி கோகுல் என்ற சிறுவன், தனது அண்ணன் எழுதிய கானா பாடலை பாடி அனைவரையும் பிரமிக்க வைத்தார். 

எளிமையான குடும்பத்தில் பிறந்து, குடும்ப பாரத்தை தன்மேல் சுமந்துகொண்டு, கானாவில் எதிர்காலத்தைக் கனவு காணும் கலர்வெடி கோகுலுக்கு, அவரின் வாழ்க்கையை மாற்றும் பெரும் வாய்ப்பை நல்கினார் இசையமைப்பாளர் தமன்.  இந்நிகழ்ச்சியின் போது, வரும் தீபாவளிக்குள், ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தின் படத்தில், அவர் அண்ணண் பாடல் எழுதவும், கலர்வெடி கோகுல் பாடவும் வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் தமன் உறுதியளித்தார். இதன்மூலம் ஒரு நிகழ்ச்சி போட்டியாக மட்டும் நடைபெறாமல், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெளியே தெரியாத பல்வேறு திறமையாளர்களின் வாழ்வை ஒளிர செய்யும் மாற்றத்தை தந்து வருகிறது.