உடல்தானம் செய்த ரோபோ சங்கர்.!!

உடல்தானம் செய்த ரோபோ சங்கர்.!!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். இவர் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்றது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரோபோ ஷங்கர், அதன் பிறகு பெரிய பெரிய முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்தார். அதுவும் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்தில் காமெடியனாக நடித்து ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அவர் ஒரு காமெடியனாக மட்டுமில்லாமல் ஒரு சமூக சேவகராகவும் வலம் வருகிறார்.

கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளின் முகாமிற்கு சென்று அவர்களுக்கு தன்னம்பிக்கை கொடுத்து வந்தார். இந்த நிலையில் அவர் உடல்தானம் செய்துள்ளார்.

ரோபோ சங்கர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். கமல்ஹாசனின் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் அவரை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்தைப் பெறுவது ரோபோ சங்கரின் வழக்கம். 

இந்த நிலையில் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் தொண்டர்கள் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை அகர்வால் கண் மருத்துவமனையில் நடத்தினர். 

அதில் கலந்து கொண்ட நடிகர் ரோபோ சங்கர் கமல்ஹாசனைப் பின்பற்றி தானும் முழு உடல் தானம் செய்தார். வரும் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள் அன்று அவரை நேரில் சந்தித்து முழு உடல் தானத்திற்காக சான்றிதழை காண்பிக்க இருப்பதாக கூறியிருக்கிறார்.