என்னது ஆர்.ஆர்.ஆர் படம் 550 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதா? அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமா?

ஆர்.ஆர்.ஆர் படம் தமிழகத்தில் 550-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது.

என்னது ஆர்.ஆர்.ஆர் படம் 550 தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதா? அதுவும் தமிழ்நாட்டில் மட்டுமா?

நடிகர் ராம் சரண் மற்றும் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிப்பில், இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், டிவிவி தானய்யா தயாரித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையே  பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப்படத்தை சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனம் நாளை தமிழகத்தில் உள்ள 550 திரையரங்குகளில் வெளியிடுகிறது.


 தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. பிரமாண்ட படங்கள் மூலம் தனக்கென தனியிடம் பிடித்துள்ள லைக்கா, இத்திரைப்படத்தையும் தனக்கே உரிய பாணியில் மிகப்பெரிய முறையில் வெளியிடுகிறது. 

தமிழகத்தில் மட்டும் இப்படம் 550 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைக்கவுள்ளது. மொழி பெயர்க்கப்பட்ட ஒரு படத்தை இத்தனை திரையரங்குகளில் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும். இது ராஜமௌலியின் முந்தைய வெளியீடான பாகுபலியை விட 150 திரையரங்குகள் அதிகமாகும்.

படத்தில் நடிகர் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாகவும், நடிகர் ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆகவும் நடித்துள்ளார். இந்த இரு பெரும் வீரர்களும் வெவ்வேறு கால கட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்பதால் இவர்கள் இருவரும் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே 'ஆர்ஆர்ஆர் ' படத்தின் மையக்கரு என்று இயக்குநர் ராஜமௌலி கூறியுள்ளார்.

மேலும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்துள்ளார். இதை தவிர ஒளிவியா மோரிஸ், அஜய் தேவ்கன்,  சமுத்திரக்கனி மற்றும் பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.