கொடுக்கப்படாத விருதை எப்படி திருப்பியளிக்க முடியும்? வைரமுத்துவை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஓ.என்.வி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்திருக்கிறேன் என தரப்படாத விருதை திருப்பியளிப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்கள் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கொடுக்கப்படாத விருதை எப்படி திருப்பியளிக்க முடியும்? வைரமுத்துவை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்..

மலையாளக் கவிஞரும் பாடலாசிரியரும் ஞானபீட விருது பெற்றவருமான ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது முதன்முறையாக வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டது.  இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த விருதைப் பெறுவதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக  வைரமுத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாடகி சின்மயி, நடிகை பார்வதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்கள் மட்டுமல்லாமல் பெண் பத்திரிகையாளர்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து டிவீட் போட்ட நிலையில் வைரமுத்துவுக்கு விருது வழங்குவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யவுள்ளதாக ஓ.என்.வி கலாச்சார மையம் அறிவித்தது.

வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது கொடுக்கப்படுமா? இல்லையா என எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாகவும், அதனால் அந்த விருதை திருப்பியளிக்க முடிவு செய்திருப்பதாகவும் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ” கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

நடுவர் குழு இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்பதால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.  ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மலையாள மண் மீதும் மக்கள் மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன் என கூறியுள்ளார்.

இந்த வீடியோவுக்கு சமூகவலைத்தளங்களில், விருதுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், எப்படியும் நமக்கு அந்த விருது கிடைக்காது என தெரிந்து, கொடுக்கப்படாத அந்த விருதை திருப்பி அளிப்பதாகவும், கொடுக்கப்படாத 3 லட்சத்தை கேரளா அரசின் நிவாரண நிதிக்கு கொடுப்பதாகவும் அறிவித்திருக்கிறார். ஒருவேளை அந்த 3 லட்சம் கொடுத்ததாகவே வைத்துக்கொள்வோம், அந்த பணத்தை விருது குழுவிற்கு தானே திருப்பிக்கொடுக்க முடியும்? அப்படியிருக்கும் போது அந்த பணத்தை எப்படி நிவாரண நிதிக்கு கொடுப்பார்? பொய்ய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே! இது கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்.கவிதைக்கு பொய்யழகு என்று எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து. கவிப்பேரரசுக்கு பொய் அழகா? என விமர்சித்து வருகின்றனர்.