நடிகர் ஆர்யா போன்று இன்னொருவாரா? ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70லட்சம் ஆட்டைய போட்ட நபர் கைது..!

நடிகர் ஆர்யாவை போன்று ஏமாற்றிய ஆசாமிகள்..!

நடிகர் ஆர்யா போன்று இன்னொருவாரா? ஜெர்மனி பெண்ணிடம் ரூ.70லட்சம் ஆட்டைய போட்ட நபர் கைது..!

பொதுவாக திரையில் வரும் நடிகர், நடிகைகள் மீது பொதுமக்களுக்கு தனி அலாதி பிரியம் உண்டு. அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள மாட்டோமா? ஆட்டோகிராஃப் கிடைக்காதா? என இன்றும் கூட பலர் ஏங்கி நிற்பதை நாம் பார்த்திக்கிறோம். அப்படியிருக்க அப்படி திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தம்மை திருமணம் செய்துக் கொள்வதாக கூறினால் கசக்குமா என்ன?

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. 6 அடி உயரம் அம்சமான கட்டுக்கோப்பான உடலமைப்பு, என பெண்களை கவரக்கூடிய அனைத்து விதமான அம்சங்களையும் கொண்டிருப்பவர். எப்படி அந்த காலத்தில் அரவிந்த்சாமிக்கு ஒரு தனி பெண்கள் ரசிகர் பட்டாளமே இருந்ததோ, அதேப் போல ஆர்யாவுக்கும் பெண்கள் ரசிகர் பட்டாளம் அதிகம். அதுவும் திருமணமாகத இளம் நடிகர் என்றால் சொல்லவா வேண்டும்? இவருக்கு பெண் பார்ப்பதற்கே தனியார் தொலைக்காட்சியில் தனி நிகழ்ச்சியே நடத்தப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்..!

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு மீண்டும் ஃபார்க்கு வந்து விட்டார் என அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு நடிகை சாயிஷாவை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் கிட்டத்தட்ட 17 வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கிறது. இருப்பினும் திருமணத்திற்கு பிறகும் இருவரும் திரைத்துறையில் தங்களது பணியினை செய்து வருகின்றனர். இந்த அழகான தம்பதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண் நடிகர் ஆர்யா மீது பண மோசடி வழக்கு ஒன்றை அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையை சேர்ந்த விட்ஜா என்றப் பெண் ஜெர்மன்யில் வசித்து வருகிறார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோருக்கு ஒரு புகார் மனுவை அனுப்பியிருந்தார். அதில், தமிழ் திரைப்பட நடிகர் ஆர்யா, தன்னை திருமணம் செய்துக் கொள்வதாக கூறி தன்னிடம் 70 லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டிருந்தார். 

இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தக் கூறி, தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற  உத்தரவிடக் கோரி விட்ஜாவின் சார்பில் ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா தன்னிடம் 70 லட்சத்திற்கு ரூபாய் மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார். மேலும் பணத்தை திரும்ப கேட்ட போது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷா பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாக கூறினார். மேலும் 6 மாதத்தில் விவாகரத்து பெற்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியதாகவும் மனுவில் தெரிவித்தார்.

இந்த வழக்கு ஒருபுறம் இருக்க, இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை நடத்தி வந்தனர். நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு அவரும், கடந்த 10-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆர்யாவின் செல்போனை ஆராய்ந்து பார்த்தப் போது விட்ஜாவுடன் பேசியதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்பது, ஆர்யாவை போன்று ஏதோ ஒரு ஆசாமி ஏமாற்றி இந்த வேலையை செய்து வந்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. பணப்பறிப்பில் ஈடுபட்ட வலைதள ஐபி முகவரியை வைத்து ராணிப்பேட்டை பெரும்புலிப்பாக்கத்தில் பதுங்கி இருந்த இரண்டு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

அந்த இருவரும் சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அர்மான் மற்றும் அவரது மைத்துனர் முகமது ஹூசைனி பையாக் என்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் ஆர்யாவைப் போல ஜெர்மனி பெண்ணிடம் நடித்து 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டனர். இந்த மோசடிக்கு காரணம் நடிகர்கள் மீதான பெண்களின் ஈர்ப்பா? அல்லது அதை பயன்படுத்தி பணத்தை கறந்த அந்த ஆண்களின் கிரிமினல் mind-ஆ என கூறுவது கடினம் தான். ஒருவர் தன்னை சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொள்கிறார் என்றால், அவர் யார், எங்கிருந்து பேசுகிறார்? எப்படி நமது எண்ணை கைப்பற்றினார்? எதற்காக நம்மிடம் இப்படி பேசுகிறார்? என அனைத்தையும் ஆராய வேண்டியது முக்கியம். சற்று வித்தியாசமாக தோன்றினாலும் கூட அவர்களுடனான தொடர்பை துண்டிக்க வேண்டுமே தவிர பேராசை பட்டால் இப்படி தான் கடைசியில் ஏமாற வேண்டியிருக்கும்.