பிறப்பும் இறப்பும் முன்பே முடிவானது.. யாஷிகாவுக்கு வனிதா ஆறுதல்.!!

பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது என விபத்தில் தோழியை பறிகொடுத்த யாஷிகாவுக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆறுதல் கூறியுள்ளார்.

பிறப்பும் இறப்பும் முன்பே முடிவானது.. யாஷிகாவுக்கு வனிதா ஆறுதல்.!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் மூலம் பிரபலமான இவர், துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி அன்று நடிகை யாஷிகா தனது தோழி பவானி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்றார்.

இரவு விருந்தை முடித்து விட்டு நள்ளிரவு சென்னை திரும்பினர். அப்போது நடிகை யாஷிகா ஆனந்த் கார் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக கார் சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா ஆனந்த் உட்பட 3 பேரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் யாஷிகா ஆனந்துக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடம்பில் பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. யாஷிகா ஆனந்த் எழுந்து நடமாடவே 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள யாஷிகா ஆனந்த், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோழியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவித்தார். அதில் வாழ்நாள் முழுவதும் அந்த குற்றவுணர்ச்சி தனக்கு இருக்கும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு கொடுமையான விபத்தில் இருந்து தன்னை காப்பாற்றியதற்காக கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது வாழ்நாள் முழுக்க தனது தோழியை பிரித்ததற்காக கடவுளை குற்றம் சொல்வதா என்று தெரியவில்லை.

மேலும் தனது உயிர் தோழியை பிரிந்து வாடும் தோழியின் குடும்பத்திற்கு இழப்பைக் கடந்து வர சக்தியை வழங்க இறைவனிடம் வேண்டிக் கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார். யாஷிகா ஆனந்தின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமாரும் நடிகை யாஷிகா ஆனந்திற்கு ஆறுதலும் அறிவுரையும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, டார்லிங் இது யாருக்கு வேண்டுமானலும் நடக்கும். அதனால் தான் அது விபத்து, பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. யாராலும் மாற்ற முடியாது.

நீயும் பாதிக்கப்பட்டவள் தான். உன்னுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றிற்காக உன்னையே நீ குற்றம் சொல்லிக்கொள்வதை முதலில் நிறுத்து, யார் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி கவலைப்படாதே, நீ மனதை தெளிவாக வைத்துக்கொள்.. ஓய்வெடு, உடல் நலனைப் பார்த்துக் கொள்.. இந்த கோரமான விபத்தில் நீ உயிர் பிழைத்ததற்கு காரணம் இருக்கும், கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் டார்லிங் என்று பதிவிட்டுள்ளார்.