சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

பிரான்சில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில், கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. 

சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்கும் நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் புகழ்பெற்ற 75 ஆவது கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் திரை நட்சத்திரங்கள் வருகை தந்துள்ள இந்த திரைப்பட திருவிழாவில், இந்தியா சார்பாக நடிகர்கள் கமல்ஹாசன், தீபிகா படுகோன் மாதவன், அக்‌ஷய்குமார், நவாசுதின் சித்திக், தமன்னா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதேபோல், இயக்குநர்கள் சேகர் கபூர், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட எண்ணற்ற பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா கௌரவ நாடாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பிரதமர் மோடி, இந்த விழாவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டார். அதையடுத்து இந்தியா சார்பில் கலந்துகொண்ட நட்சத்திரங்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்தத் விழாவில், மாதவன் இயக்கியுள்ள ராக்கெட்டரி திரைப்படம், ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கியுள்ள மா துஜே சலாம் திரைப்படம், கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ஆகியவை திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவுக்கான நடுவர் குழுவில் சர்வதேச திரையுலக பிரபலங்களுடன் நடிகை தீபிகா படுகோன் இடம்பெற்றுள்ளார். இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமையில் நடந்த கலந்தாய்வின் தொடக்கத்தில், ஹிந்தி நாட்டுப்புற பாடகர் மாமே கான் சிங் பாட்டிற்கு நடிகைகள் உற்சாக நடனம் ஆடினர்.