ஆஸம்! அமேசிங்!! சான்ஸே இல்ல!!! ஆனா பாகுபலி 2 அளவுக்கு இல்லை!!  

பாகுபலி மற்றும் பாகுபலி 2 விற்கு பின் RRR-ஐ  பார்த்து விட்டு தியேட்டரிலிருந்து வெளியே வரும் ரசிகர்களின் ரியாக்‌ஷன் இப்படியாகத்தான் தெரிகிறது.

ஆஸம்! அமேசிங்!! சான்ஸே இல்ல!!! ஆனா பாகுபலி 2 அளவுக்கு இல்லை!!  

உலகெங்கும் வியாபித்திருக்கின்ற இந்திய சினிமா ரசிகர்கள் நகம் கடித்தபடி காத்திருந்த ஆர்.ஆர்.ஆர் அதாவது  (இரத்தம் ரணம் ரௌத்திரம்)  அநாயச அசத்தலுடன் ரிலீஸாகிவிட்டது. சல்மான் கான், சிரஞ்சீவி, ரஜினி, அஜித், பிரபாஸ், யஷ் போன்ற தர மாஸ்  ஹீரோக்களின் படங்களுக்கு அவர்களின் வெறிபிடித்த ரசிகர்கள் அந்தந்த மாநிலங்களில் மிட்நைட் முதலே தியேட்டர் வாசலில் காத்திருந்து ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்ப்பதில் ஆச்சரியமில்லை.

ஆனால் அக்கிராஸ் தி இன்டியா ரசிகர்கள் இல்லாத இரண்டு ஹீரோக்களின் படத்துக்கு இப்படியொரு ஓப்பனிங் என்பது ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆருக்கு கிடைத்த வெற்றியல்ல. இது முழுக்க முழுக்க ராஜமெளலி எனும் இந்திய பிரமாண்ட இயக்குநருக்கு கிடைத்த கெளரவ கிரீடம்.

சரி, RRR _க்குள் நுழைவோம். இங்கிலாந்து பெண்ணுக்கு பச்சைக் குத்தும் சிறுமியை பிடித்துப் போக காசுகளை தூக்கி எறிந்து விட்டு அந்த சிறுமியையே கடத்திச் செல்கின்றனர் ஆங்கிலேயர்கள். அந்த சிறுமியை காப்பாற்ற வரும் ஜூனியர் என்டிஆர் செய்யும் முயற்சிகளும், அந்த குழந்தையை காப்பாற்ற வரும் காப்பானை கைது செய்ய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் போலீஸ் ராம்சரணை எப்படி தடுத்து தனது லட்சியத்தை அடைகிறார் என்பதே RRR பட கதை.

ரயில் எஞ்சின் வெடித்து ஆற்றுக்குள் விழ அப்போது பரிசலில் செல்லும் சிறுவன் பாலத்துக்கு அடியில் சிக்கிக் கொள்ளும் போது அந்த  சிறுவனை காப்பாற்ற குதிரையில் வரும் ராமும் புல்லட்டில் வரும் பீமும் பாலத்துக்கு அடியில் சிக்கி இருக்கும் சிறுவனை மீட்க எப்படி தொங்கியபடி அவனை மீட்கின்றனர் என்கிற காட்சி மைண்ட் பிளோயிங் மேக்கிங். கடத்தப்பட்ட குழந்தையை மீட்க இஸ்லாமியராக ஊருக்குள் நுழையும் பீம், பீமை பிடிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி தான் ராம் என்பது தெரியாமலே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்.

ஒரு கட்டத்தில் பாம்பு ஒன்று ராம்சரணை கடித்து விட மூலிகை கொடுத்து ராமின் உயிரை பீம் காப்பாற்றி விடுகிறார். அதன் பிறகு தனது உண்மையான பெயரையும் தான் வந்த விஷயம் குறித்தும் நண்பன் என நினைத்து ராமிடம் சொல்ல உண்மையை தெரிந்து கொண்ட ராம் குழந்தையை காப்பாற்ற முயலும் பீமை தடுக்க என்ன செய்தார் என்பது தான் இன்டர்வெல் சீன்.  நெருப்புடன் ராம்சரணும், தீயணைப்பு வண்டி ஹோர்ஸ் பைப் உடன் நீர் பொங்க ஜூனியர் என்டிஆறும் வந்து சண்டை போடும் அந்த நீரும் நெருப்பும் ஸீன் இந்திய சினிமாவிலேயே இதுவரை பார்க்காத இன்டர்வெல் பிளாக். 

காதலியின் அழைப்பையேற்று ஆங்கிலேயர்கள் இருக்கும் அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்கிறான் பீம். அப்போது அந்த பிரிட்டிஷ் பெண்ணிடம் இவனை ஏன் கூட்டிட்டு வந்த இவனுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா? Brown Beggars என அவமானப்படுத்துமோது ராமும், பீமும் இணைந்து போடும் மரண குத்து தியேட்டரே அலறுது.

ராமச்சரணின் அறிமுகக்காட்சியில் சுமார் 5000 பேர் மக்கள் போராட்டத்தில் ஒருத்தன் ஸ்டேஷனுக்குள் கல் எறிய, அவனை கண்டுபிடித்து கைது செய் என ராம் ஆகிய ராம்சரணுக்கு உத்தரவு கொடுக்க, அப்போது அந்த கூட்டத்தில் இருக்கும் அத்தனை பேரையும் கொடூரமாக லத்தி சார்ஜ் செய்து அடித்து நொறுக்கி அந்த கல் எறிந்தவனை கண்டுபிடித்து கைது செய்யும் ராம்சரணின் என்ட்ரி பக்கா மாஸ்.

அறிமுக காட்சியில் ஆரம்பித்து எண்டு கார்டு போடும் வரை ராம்சரண் மற்றும் ஜுனியர் என்டிஆரின் ஆளுமை ஸ்கிரீன் நெடுக வியாபித்திருக்கிறது. நீட்சியான க்ளைமேக்ஸில் ஆங்கிலேயர்கள்  கூட்டத்தை சிதற சிதற பொளந்து கட்டுவதாகட்டும், கோட்டையை ஒரே அம்பில் வெடிவைத்து தகர்ப்பதாகட்டும் பின்னுகிறார்கள் ராம் சரண் & ஜுனியர் என்.டி.ஆர்.

’இரத்தம் ரணம் ரௌத்திரம்’ என்ற பெயருக்கு ஏற்ப தெறிக்க தெறிக்க நியாயம் செய்திருக்கிறார்கள் ராம்சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர். சாரி. இந்த கிரெடிட் ஜுனியர் என்.டி.ஆருக்கே கொடுக்கலாம், மனுஷன் நடிப்பில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். அவர் பேசும் டயலாக்ஸை விட கண்களில் காட்டியிருக்கும் நடிப்பே பல அவார்டுகளை வாங்கி குவிப்பார்.

போலீசாக ராம் சரணும்,  சிறுமியின் அண்ணனாக ஜுனியர் என்.டி.ஆரும் என்று இரண்டு கதாபாத்திரங்களையும் அநாயாசமாக தூக்கி நடக்கிறார்கள். மரத்தை பெயர்த்து அடிப்பது, நெடும் சுவற்றை கையால் உடைப்பது என்று அவர் வித்தை காட்டும் போது அவை உண்மைதான் என்று மொத்தமாக நம்ப வைக்கிறது அவரது உடலமைப்பு.

"பீம்" எனும் உக்கிரமான சக்தியுடைய இணையாக ஈடு கொடுக்கும் அளவிற்கு நண்பனை அடித்து துன்புறுத்தும் காட்சியிலும் சரி, அதே குற்றஉணர்ச்சியோடு அவனை காப்பாற்றியது கூட தெரியாமல் அடிபட்டு கிடக்கும்போதும் சரி ராமின் பாத்திரத்தை தெளிவாக தூக்கி சுமக்கிறார் ராம் சரண்.

ஒவ்வொரு சண்டை காட்சியிலும் பக்கத்து சீட் மனிதரின் முகத்தில் ரத்தம் தெறிக்கிறது. ஆக்‌ஷன் சீக்குவன்சில் ஃப்ரேம் பை ஃப்ரேம் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது செந்தில்குமாரின் கேமரா. RRR ஒரு ஆக்‌ஷன் லெஜெண்ட் மாத்திரமே என்று நினைப்பவர்களுக்கு ‘ஸாரி பாஸ்’ என பஞ்ச் வைக்கிறார் ராஜமெளலி. படம் முழுக்க அவ்வளவு எமோஷனல் சீன்கள் நிரம்பி இருக்கின்றன. பல இடங்களில் ஜுனியர் என்.டி.ஆரின் அசாத்திய நடிப்பால் நம் கண்கள் பனிப்பதை தவிர்க்க முடியவில்லை. ஹெவியான ஆக்‌ஷன் பிளாக்குகளின் நடுவே இப்படியான எமோஷனல் சீன்கள் ராஜமெளலிக்கு மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது.

காம்பேக்ட் பியூட்டி ஆலியாபட் அள்ள அள்ள அழகுடன் ஜொலிக்கிறார். சிம்பிளாக சொல்வதென்றால் ராமனுக்காக காத்திருக்கும் சீதாவாக நெஞ்சமெங்கும் அழகு ததும்ப நிறைகிறார்.  ஆலியா பட்க்கு பெருசா இடமில்லை என்பது ஆலியாபட் ரசிகர்களுக்கு வருத்தமே. இந்திக்கு அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழுக்கு சமுத்திரக்கனி என படத்தின் வியாபாரத்திற்கு பயன்படுத்தியிருப்பது தெளிவாகவே தெரிகிறது. 

மரகத மணியின் இசை எக்ஸ்ட்ராடினரி. சில இடங்களில் பின்னணி இசைக்கு ஈடு கொடுக்க முடியாமல் காட்சிகள் சாதாரணப்பட்டு போகின்றன என்றால் யோசித்துக் கொள்ளுங்கள். ஆக்ஷன் ப்ளாக்கென்று மரகதம் பிடித்திருக்கின்ற டியூன்கள் அநாயசம்.

கதாபாத்திரங்களின் அறிமுகம், அந்தந்த மொழிக்கான ஷார்ப் டயலாக்ஸ், வண்ணம், அரங்கமைப்பு, சண்டை காட்சி வடிவமைப்பு, என ஒவ்வொரு ஃபிரேமிலும் பொங்கி வழியும் பிரம்மாண்டம் என்று எதிலுமே குறை வைக்காமல் ரசிகர்களை மிரட்டியுள்ளார்.

ஆக்‌ஷன், ரொமான்ஸ், சென்டிமெண்ட்ஸ் என்று எல்லா ஜானல்களிலும் பிரம்மாண்டம் மற்றும் நிறைவின் உச்சத்தை தொட்டுப் படைக்கப்பட்டிருக்கும் RRR - ஐ சிம்பிளாக விமர்சிப்பதென்றால்.... இது ஒரு சினிமேட்டிக் ஆர்கஸம்! 

Last but not least பாகுபலி 2 அளவிற்கு இல்லையென்றாலும் மீண்டுமொருமுறை பிரம்மாண்டத்தின் உச்சத்தை திரையில் காட்டிய ராஜமௌலிக்கு ஒரு ராயல் சல்யூட் அடிக்கலாம்....