அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக அள்ளப்படும் குளத்து மண்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்!!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கண்மாயின் கடை மடையை ஒட்டிய பல பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மண் அள்ளப்படுவதாக  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள முகவூர் கண்மாயை நம்பி சுமார் 300 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. விவசாயிகளின் நலனுக்காக இக் கண்மாயில் இருந்து மண் எடுத்துக் கொள்ள கனிம வளத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தரை மட்டத்தில் இருந்து 4 அடிக்குள் மண் எடுக்க வேண்டும், நீர் பிடிப்பு பகுதிக்குள் மண் எடுக்க கூடாது, கடைமடை, கலிங்கல் பகுதியில் மண் எடுக்க கூடாது என பல்வேறு விதிமுறைகளுடன் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் இக் கண்மாயில் மண் எடுப்பதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விட பயன்படுத்தப்படும் கடைமடையை ஒட்டிய பகுதியின் பல்வேறு இடங்களில் அளவுக்கு அதிகமாக அள்ளிச் செல்கின்றனர். இதனால் கம்மாயில் ஒரே சீராக மணல் அல்லாமல் ஒவ்வொரு இடத்திலும் 20 அடி 30 அடி பள்ளம் தோன்டுவதால் நிலத்தடி நீர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள் மற்றும் அப் பகுதியில் குளித்து விளையாடும் சிறுவர்கள் குழியில் மாட்டிக் கொண்டால் உயிர்பலி நிச்சயம் என்ற நிலை உருவாகியுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் மவுனம் சாதித்து வருகின்றனர் என ஊர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கண்மாய்களில் மண் எடுத்து செல்லும் நூற்றுக் கணக்கான டிராக்டர்கள், முகவூர் மற்றும் தளவாய்புரம் ஊருக்குள் அதி வேகத்தில் செல்வதாகவும், இதனால் டிராக்டர் சத்தம் கேட்டாலே மக்கள் அலறி அடித்து ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதை காவல் துறையினரும் கண்டு கொள்வதில்லை எனவும் ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளி நேரத்தில் கூட அதிவேகமாக செல்லும் டிராக்டர்களால் மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் கண்மாயில் மண் எடுக்கப்படும் போது நடக்கும் விதி மீறல்கள் குறித்து ஆய்வு செய்யவும், ஊருக்குள் செல்லும் டிராக்டர்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகவூர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.