வருமானத்தை பெருக்க நினைத்து, பல லட்சங்களை பறிகொடுத்த நபர்... நூதன மோசடியில் சிக்கிய பரிதாபம்!!

போலி இணையதளம் மூலம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்த நபரை, ஹரியானா சென்று கைது செய்துள்ளனர் தென்காசி போலீசார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் பார்டர் பகுதியை சேர்ந்தவர் துளசிபட்டேல். மரம் அறுக்கும் ஆலை வைத்து தொழில் செய்து வரும் இவர், கூடுதலாக ஒரு சில தொழில்களில் ஈடுபட்டு தனது வருமானத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக இலஞ்சி - தென்காசி சாலையில் கேஸ் பல்க் ஒன்று வைத்து அதன் மூலம் தனது வருமானத்தை பெருக்க முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், கேஸ் பல்க் அமைப்பதற்கு என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், எப்படி கேஸ் பல்க் வைக்க அனுமதி வாங்க வேண்டும என ஆன்லைன் மூலம் தகவல்களை தேடி உள்ளார். அப்பொழுது, கூகுள் தேடுதல் தளத்தில் தேடிக் கொண்டிருந்த போது அதானி கேஸ் பல்க் நிறுவனம் என்ற பெயரில் ஒரு வெப் பேஜ் இருந்துள்ளது. அதன் உள்ளே சென்ற துளசி பட்டேல், அதில் உள்ள தொலைபேசி எண்களை எடுத்து தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்பொழுது, அதில் பேசிய நபர்கள் கேஸ் பல்க் அமைக்க ரூ.50 லட்சம் வரை செலவாகும் எனவும், முதற்கட்டமாக ரூ.22 லட்சம் பணத்தை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர். ஆனால், துளசிபட்டேல் முதற்கட்டமாக வங்கி கணக்கு வழியாக ரூ.13 லட்சத்தை அனுப்பி உள்ளார். இந்த நிலையில், பணத்தை அனுப்பி நீண்ட நாட்கள் ஆகியும், கேஸ் பல்க் அமைப்பதற்கான எந்த விதமான அனுமதியோ, பொருட்களோ அந்த நிறுவனத்தின் மூலம் கிடைக்கப்பெறாத நிலையில், அந்த நபரை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அந்த நபர்களை தொடர்பு கொள்ள முடியாத சூழலில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த துளசிப்பட்டேல், உடனே தென்காசி மாவட்ட சைபர் குற்ற பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரின் மீது தென்காசி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஐ.பி அட்ரஸ் மூலம் குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில், துளசி பட்டேலை ஏமாற்றிய நபர் ஹரியானா மாநிலத்தில் இருப்பதை உறுதி செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று துளசி பட்டேலிடம் ரூ.13 லட்சத்தை மோசடி செய்த நபரை கைது செய்து தென்காசி அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த நபர் பீகார் மாநிலம், தனபூர் மாவட்டம், ஜெய்ராம் பஜார் பகுதியை சேர்ந்த சந்திரஜீத் ஸ்ரீவஸ்தவ் (வயது 28) என்பது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து, அவரை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசார் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வரும் சூழலில், பல்வேறு தொழில்களை செய்து வருமானம் ஈட்ட முயற்சி செய்த நபர் போலி இணையதளங்கள் மூலமாக ரூ.13 லட்சத்தை இழந்த சம்பவம் தென்காசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது போன்ற இணைய வழி குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென காவல்துறையினர் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.