லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக சிக்கிய வனச்சரக அலுவலர்!

லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக சிக்கிய வனச்சரக அலுவலர்!

உரிமம் பெற்ற செம்மர வியாபாரிக்கு வாகன சிபாரிசு கடிதம் வழங்க 5000ரூபாய் லஞ்சம் வாங்கிய கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலர், ஓட்டுநர் இருவர் கைது.

தமிழ்நாடு - ஆந்திர எல்லையான மாதர்பாக்கத்தில், கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலகம் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலம் வரதையபாளையத்தை சேர்ந்த உரிமம் பெற்ற செம்மர வியாபாரியான முனிபாபு என்பவர் கும்மிடிப்பூண்டி வனச்சர அலுவலர் ஞானப்பனிடம் வாகன சிபாரிசு கடிதம் பெறுவதற்காக அணுகியுள்ளார்.

அப்போது வனச்சரக அலுவலர் ஞானப்பன், தம்முடைய உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வழங்குவதற்காக 10000ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் கேட்டதால் விரக்தியடைந்த செம்மர வியாபாரி முனிபாபு இது தொடர்பாக திருவள்ளுர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் முனிபாபு ரசாயனம் தடவிய 5000ரூபாயுடன் வனத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது பணத்தை வனச்சரக அலுவலர் ஞானப்பன் தமது ஓட்டுநரான யுவராஜிடம் வழங்க கூறியதன் பேரில் முனிபாபு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஓட்டுனரிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து சுமார் 4மணி நேரம் விசாரணைக்கு பிறகு வனச்சரக அலுவலர் ஞானப்பன், ஓட்டுநர் யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து அழைத்து சென்றனர். செம்மர வியாபாரி வாகனத்திற்கு சிபாரிசு கடிதம் வழங்க லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்ட சம்பவம் வனத்துறை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க || இன்று முதல், அமுதம் அங்காடிகளில் தக்காளி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு!!