அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை யார் விசாரிப்பது?

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கை யார் விசாரிப்பது?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியுள்ளார் மேலும் இந்த உயர்நீதிமன்றத்தில் எந்த அமர்வு விசாரிப்பது என்பதை பதிவுதுறை முடிவெடுக்கும் என என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றமும் மறுத்து விட்டன. 

மேலும், ஜாமீன் மனுவை  விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் நேற்று முறையிட்டார்.  

அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டு எப்படி ஏற்பது? என  நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார். 

இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால் தான் தங்களிடம் முறையிடுவதாகவும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது என தெரிவித்தார். 

எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் கூறினார். 

இந்நிலையில், இந்த மனுவை பட்டியலிட தலைமை நீதிபதி ஒப்புதல் தெரிவித்து விட்டதால் இந்த வழக்கில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு நகல் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முறைப்படி உத்தரவு பிறப்பித்தனர். மேலும், இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து பதிவுத்துறை முடிவெடுக்கும் எனவும் நீதிபதி எம்.சுந்தர் கூறினார்.