"சட்டப் புத்தகங்களையே கொளுத்துகின்ற நிலை ஏற்பட்டு விடும்" வழக்குரைஞர் கூட்டமைப்பு!

"சட்டப் புத்தகங்களையே கொளுத்துகின்ற நிலை ஏற்பட்டு விடும்" வழக்குரைஞர் கூட்டமைப்பு!

குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றங்களால் "சட்டப் புத்தகங்களையே கொளுத்துகின்ற நிலை ஏற்பட்டு விடும்" வழக்குரைஞர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.  

இந்திய சாட்சிய சட்டம் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் பெயர் மாற்றம் ஹிந்தியில் செய்யப்பட்டதை கண்டித்து வழக்குரைஞர்கள் கூட்டமைப்பை சார்ந்தவர்கள் உயர்நீதிமன்றம் முன்புறமுள்ள சாலையில் பேரணியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைவர் நவநீதகிருஷ்ணன், இந்திய சாட்சிய சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களின் பெயர்கள் மட்டுமல்லாது சட்டங்களின் உட்கட்டமைப்பான சாராம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.

இந்த சட்டங்களின் பெயர் மாற்றம் இந்த காலத்திற்கு மட்டுமல்லாது வருங்காலத்திற்கும் தேவையில்லாததாக இருக்கிறது. ஒட்டுமொத்த நீதி துறையும் பின்னோக்கி செல்லக்கூடிய அவலத்தை இந்த சட்டங்கள் உருவாக்கிவிடும் என தெரிவித்தார். 

ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற சட்டங்களை பின்பற்றி தான் வழக்கறிஞர்கள் வழக்குகளை நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், இப்படி இருந்தால் சட்ட புத்தகங்களையே கொளுத்துகின்ற நிலை ஏற்பட்டு விடும் எனக் கூறினார். 

தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவிலேயும் இந்த சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தவிருப்பதாக குறிப்பிட்ட அவர்.  இந்த சட்டங்களால் சட்டத்துறை 50 ஆண்டுகாலம் அல்ல 100 ஆண்டு காலம் பின்னோக்கி செல்லும் வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறினார்.