செவிலியர்களின் அலட்சியத்தால் கையை இழந்த பச்சிளம் குழந்தை!

செவிலியர்களின் அலட்சியத்தால் கையை இழந்த பச்சிளம் குழந்தை!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியர்களின் அலட்சியத்தால்  குழந்தையின் கை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்ட சம்பவம் அதிர்சச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் - அஜிஸா தம்பதியின், ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு, தலையில் ரத்த கசிவு  இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டு கடந்த 3 தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில்  குழந்தைக்கு போடப்பட்ட 'ட்ரிப்ஸ்' காரணமாக குழந்தையின் வலது கை நிறம் மாறியதாக கூறப்படுகிறது. இது குறித்து  குழந்தையின் தாய் செவிலியர்களிடம் கூறியும் அவர்கள் அலட்சியம் காட்டிய நிலையில் குழந்தையின் வலது கை அழுகிய சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த குழந்தையின் தாயார், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியப்போக்கு காரணமாகவே தனது குழந்தையின் கை அகற்றப்பட்டதாக குற்றம்சாட்டினார். இதற்கு  காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கண்ணீர் மல்க கூறினார்.

இது குறித்து விளக்கமளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், குழந்தைக்கான சிகிச்சையின்போது கவனக் குறைவால் தவறு ஏற்பட்டதா என்பது குறித்து கண்டறிய 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  உறுதி  அளித்துள்ளார்.

முன்னதாக  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!