போலி இரசீதுகள் தயாரித்து நிறுவனத்துக்கு நாமம் போட்ட குடும்பம்!! தனிப்படையினரால் கைது...புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு...

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் 47 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட குடும்பம் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

போலி இரசீதுகள் தயாரித்து நிறுவனத்துக்கு நாமம் போட்ட குடும்பம்!! தனிப்படையினரால் கைது...புதுவண்ணாரப்பேட்டையில் பரபரப்பு...

சென்னையை அடுத்த திருவள்ளுர் மாவட்டம் வேப்பம்பட்டு கிராமம் மல்லிகை நகர் பகுதியில் வசித்து வருபவர்  திரவிய சுந்தரம். இவர் சென்னை தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள VPMA பருப்பு கம்பெனியில் சுமார் 18 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் தனது மகனான  தீபன்ராஜ்யை 2014  ஆம் ஆண்டு வேலைக்கு சேர்த்து உள்ளார்.

பருப்பு வியாபாரம்  செய்யும் கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்த இவர், அவ்வப்போது விற்பனைக்காக பல மாவட்டங்களுக்கு சென்று வருவார். இதே நிறுவனத்தில் 12 ஆண்டுகளாக கணக்காளராக  பணிபுரிந்து வந்த யுவராணி என்பவரும் தீபன்ராஜ் இருவரும் காதலித்து  திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில் தந்தை கணவன் மனைவி மூவரும் சேர்ந்து போலி இரசீதுகள் தயாரித்து போலி கணக்கு வழக்குகள் காட்டி பல இலட்சம் ரூபாய்  மோசடி செய்து வந்தது  அந்நிறுவனத்திற்கு  தெரியவந்தது. இதனையறிந்த அந்த குடும்பத்தினர் எங்கு தாங்கள் மாட்டிக்கொள்வோமோ என்ற அச்சத்தில் தலைமறைவாகினர்.

இதனையடுத்து VPMA   பருப்பு கம்பெனியின் சார்பாக இராஜூகணேஷ் என்பவர் சென்னை H5 காவல்நிலையத்தில் கடந்த மாதம் 5ஆம் தேதி புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் வடசென்னை காவல் துணை ஆணையர் சிவபிரசாத் அவரது தலைமையில் தனிப்படை அமைத்து தேடிவந்தார்.

இதனையடுத்து  தலைமறைவான மூவரும் சென்னையில் பாரிமுனையில் தங்கி இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூவரையும் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் 3 சிம்காடுகள் மற்றும் 30000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர்களிடம் விசாரணை செய்தபோது மோசடி பணம் முழுவதையும் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் இழந்ததாக தீபன்ராஜ் கூறியுள்ளான். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.