பொது இடங்களில் பெண்களின் புகைப்படம்; ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் விற்பனை; வாலிபர் கைது!

பொது இடங்களில் பெண்களின் புகைப்படம்; ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் விற்பனை; வாலிபர் கைது!

பொது இடத்தில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக சித்தரித்து விற்பனை செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 21வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது புகைப்படத்தை சிலர் ஆபாசமாக சித்தரித்து டெலிகிராமில் பணத்திற்கு விற்பனை செய்வதாக தனது நண்பர் ஒருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும், அந்த புகைப்படத்தை தனது நண்பர் மூலமாக 47 ரூபாய்க்கு வாங்கி பார்த்த போது, கடந்த 2022ஆம் ஆண்டு தீபாவளிக்காக பிரபல ஷாப்பிங் மாலிற்கு சென்று துணி எடுத்த போது தனக்கு தெரியாமல் எடுத்த புகைப்படம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் விற்பனை செய்து வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார். 

இந்த புகார் தொடர்பாக தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் பணம் செலுத்திய வங்கி கணக்கை வைத்து விசாரணை நடத்தி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த ஆர்யா(22) என்ற வாலிபரை சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆர்யா கல்லூரியில் ஐடி பி.டெக் படிப்பை முடித்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. மேலும் வாலிபர் ஆர்யாவிடம் சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

தமிழகத்தில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான துணிக்கடை, பிரபல மால்கள், திரையரங்குகள், மார்க்கெட் ஆகிய பகுதிகளில் வரும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பதை ஆர்யா வாடிக்கையாக வைத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்களின் துணி விலகிய நேரத்திலும், மாடர்ன் உடையில் வரும் பெண்களை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அப்படி எடுக்கும் பெண்கள் புகைப்படத்தை ஆப் மூலமாக ஆபாசமாக சித்தரித்து டெலிகிராம்  மூலமாக ஆர்யா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. குறிப்பாக டெலிகிராமில் zip பைல் மூலமாக ஒரு புகைப்படத்தின் விலை 50 ரூபாய் எனவும், நிர்வாண புகைப்படத்தின் விலை 100 ரூபாய் எனவும், ஆபாச வீடியோக்கள் 1000 ரூபாய் என விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆர்யா தனியாக பல டெலிகிராம் சேனலை தொடங்கி அதில் பொது இடங்களில் எடுக்கும் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து விலையை நிர்ணயித்து விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கடந்த 3 மாதத்தில் மட்டும் பொது இடங்களில் எடுத்த பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து 4 லட்சம் ரூபாய்க்கு டெலிகிராமில் விற்பனை செய்திருப்பதாக ஆர்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தின் போது பெற்றோரை பிரிந்து தாத்தா, பாட்டி வீட்டிற்கு வந்து தங்கியதால் அங்கு தனிமையில் இருந்து வந்ததாகவும், மேலும் அதிகப்படியான நண்பர்கள் இல்லாததால் போனில் மூழ்கியதாகவும் கைது செய்யப்பட்ட ஆர்யா போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அதிகப்படியான ஆபாச படங்களை பார்த்த போது, அதில் பொது இடங்களில் ஆபாசமாக சித்தரித்து பெண்களின் புகைப்படங்களை விற்பனை செய்வோர் ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டதாகவும், அவர் ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள பிரபல மால்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், திரையரங்குகள் ஆகியவற்றிற்கு வரும் பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து தரும்படி தெரிவித்ததாகவும், அதிகப்படியான பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இறங்கியதாகவும் ஆர்யா வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு பெண்களின் புகைப்படத்தை விற்பனை செய்து அதன் மூலமாக பணத்தை கிப்ட் வவுச்சர்களாக மாற்றி முக்கிய நபருக்கு அனுப்பி வந்ததாகவும் ஆர்யா தெரிவித்துள்ளார். பெண்களின் ஆபாச புகைப்படங்கள் விற்பது மூலம் அதிகப்படியான தொகை வந்ததால் பின்னர் தானே டெலிகிராம் சேனல் தொடங்கி ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் விற்பனை செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதே போல தமிழகத்தில் இருந்து பல இளைஞர்கள் பொது இடங்களில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆர்யாவிற்கு அனுப்பி வருவதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலமாக சம்பாதித்த பணத்தை விலை உயர்ந்த செல்போன், சுற்றுலா சொகுசு வாழ்க்கை ஆர்யா வாழ்ந்து வந்துள்ளார். 

கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் ஆர்யாவிடமிருந்து செல்போன், மடிக்கணினி, வங்கிக் கணக்கு அட்டைகள் மற்றும் 3600 பெண்களின் ஆபாசமாக சித்தரித்த புகைப்படங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுமட்டுமின்றி ஆர்யாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2டிபி ஹார்டிஸ்குகளில் லட்சக்கணக்கான பெண்களின் புகைப்படங்களும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்டுள்ள ஆர்யாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தமிழகத்தில் பொது இடங்களில் பெண்களின் புகைப்படங்களை எடுத்து ஆர்யாவிற்கு அனுப்பும் நபர்களையும் போலீசார் தேடி வருவதாகவும் அவர்களை விரைவில் கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இணையதளங்கள் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்களை பெண்கள் பகிரும் பொழுது மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் பெண்களை தவறாக புகைப்படம் எடுக்கும் அந்நியர்களை கண்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அவசர எண் 100க்கோ தகவல் அளிக்குமாறு தெற்கு மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர் இதே போல சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பழகுவதை தவிர்க்குமாறும், தேவையின்றி புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களையோ பகிர வேண்டாம் என தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிக்க:"ஒற்றை இந்தியா, ஒற்றை மொழி, ஒற்றை சிவில் சட்டம்... பன்மைத்தன்மையை சிதைத்து விடும்" அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!