மாணவரை தாக்கிய ஆசிரியர் கைது... சஸ்பென்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...

சிதம்பரம் அரசு பள்ளியில் மாணவரை தாக்கிய வழக்கில் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

மாணவரை தாக்கிய ஆசிரியர் கைது... சஸ்பென்ட் செய்து பள்ளி நிர்வாகம் நடவடிக்கை...

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவரை இயற்பியல் ஆசிரியர் பிரம்பால் அடித்து காலால் உதைத்து தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து கடலூர் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலரும், துணை ஆட்சியருமான செல்வபாண்டி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று பள்ளியில் விசாரணை நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இயற்பியல் ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதற்கிடையே ஆசிரியர் தாக்கிய தில் காயமடைந்த 12ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கும் சென்ற அதிகாரிகள் குழுவினர் நடந்த சம்பவம் குறித்து மாணவரிடம் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவரிடம் சிதம்பரம் நகர போலீசாரும் தனியே விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மாணவனை வகுப்பறையில் தாக்கிய இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார் ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் ஆசிரியரை சிதம்பரம் இரண்டாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே துணை ஆட்சியர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இயற்பியல் ஆசிரியர் சுப்பிரமணியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.